நாடு முழுவதும் பழைய வாகனங்களை அழிக்கும் திட்டம் அமலுக்கு வரும்போது வாகனங்களுக்கு எவ்வளவு வரி விதிக்கப்படும் என்பது பற்றி தகவல் வெளியாகியுள்ளது.
நாட்டில் காற்று மாசு மற்றும் சுற்றுச்சூழல் மாசு அதிகமாக இருப்பதால், அதனை கருத்தில் கொண்டு பழைய வாகனங்கள் அனைத்தையும் பயன்பாட்டில் இருந்து நீக்குவதற்கு மத்திய பட்ஜெட்டில் புதிய திட்டம் அறிவிக்கப்பட்டுள்ளது. அதன்படி எட்டு ஆண்டுகளை கடந்த வாகனங்கள் அனைத்தும் ஒவ்வொரு வருடமும் தகுதி சான்றிதழ் பெற்று தான் பயன்படுத்த வேண்டும். 15 ஆண்டுகளை கடந்த வாகனங்களை 5 ஆண்டுகளுக்கு ஒருமுறை வாகன பதிவு சான்றிதழ் பெறுவது அவசியம். இந்த நிலையில் புதிய திட்டத்தின்படி வணிக ரீதியில் பயன்படுத்தப்பட்டு வருகின்ற வாகனங்கள் 15 ஆண்டுகளை கடந்து இருந்தால் 62 மடங்கு கூடுதல் கட்டணம் செலுத்தி சான்றிதழ் பெற வேண்டும் என அறிவிக்கப்பட்டுள்ளது.
அதன்படி கார்களுக்கு 200 ரூபாயாக இருந்த கட்டணம், 7,500 ரூபாயாகவும், கனரக வாகனங்களுக்கு 600 ரூபாயாக இருந்த கட்டணம் 12,500 ரூபாயாகவும் உயர வாய்ப்புள்ளது. தனிநபர் பயன்படுத்துகின்ற வாகனங்கள் 20 ஆண்டுகளை கடந்து இருந்தால் எட்டு மடங்கு கூடுதல் கட்டணம் செலுத்தி பதிவை புதுப்பித்துக் கொள்ள வேண்டும். இருசக்கர வாகனங்களுக்கு 300 ரூபாயாக இருந்த கட்டணம் 1,000 ரூபாயாகவும், கார்களுக்கு 600 ரூபாயாக இருந்த கட்டணம் 5,000 ரூபாயாகவும் உயர்த்தப்படும்.
இதனை தவிர சாலை வரியுடன் வசூலிக்கப்படும் பசுமை கட்டணமும் 10 முதல் 25 சதவீதம் வரை உயர்த்த வருவதற்கு அதிக வாய்ப்புள்ளது. இவ்வாறு பல விதிமுறைகளை கொண்ட திட்டம் அமலுக்கு வந்த பிறகு பழைய வாகனங்களை பயன்படுத்துபவர்கள் அனைவரும் அதிகமான வரி செலுத்த நேரிடும். அதனால் பழைய வாகனங்களின் பயன்பாடு முற்றிலும் குறைந்து விடும் என மத்திய அரசு தெரிவித்துள்ளது.