அரசு சட்டவிரோதமாக செய்யப்படும் பரிவர்த்தனைகளை தடுக்க பல நடவடிக்கைகளை எடுத்து வருகிறது. இதற்காக அரசு பண வரம்பிற்கான விதிகளில் சில திருத்தங்களை மேற்கொண்டது. அதன்படி குறிப்பிட்ட வரம்புக்குமேல் பணம் டெபாசிட் செய்தால் (அல்லது) பணத்தை பெற்றால் அவர்கள் பெறும் தொகையில் 100% வரையிலும் அபராதம் விதிக்கப்படும். மத்திய நேரடி வரிகள் வாரியம் விதித்துள்ள புது விதிகளின் படி, ஒரு ஆண்டில் ரூபாய்.20 லட்சத்திற்கும் மேல் டெபாசிட் செய்ய விரும்பும் தனி நபர் அவரது பான்கார்டு மற்றும் ஆதார்கார்டு விபரங்களை சமர்ப்பிக்க வேண்டும் என தெரிவித்துள்ளது. முன்னதாக ஒரு நாளில் ரூபாய்.50,000 டெபாசிட் செய்யும் போது பான்கார்டு விபரங்களை கொடுக்க வேண்டும். எனினும் அப்போது ஆண்டுக்கான டெபாசிட் வரம்புகள் எதுவும் நிர்ணயம் செய்யப்படவில்லை.
தற்போது விதிக்கப்பட்டுள்ள புது விதிகளின் அடிப்படையில், ஒருஆண்டில் பல்வேறு வங்கிகளிலும் டெபாசிட் செய்யப்படும் தொகை மற்றும் பணம் எடுக்கும் தொகை போன்றவற்றை கண்காணிக்கும் அடிப்படையில் பான்கார்டு மற்றும் ஆதார்கார்டு விபரங்களை வழங்குவது கட்டாயமாக்கப்பட்டு இருக்கிறது. பான்கார்டு இல்லாதவர்கள் பேங்கில் நிர்ணயம் செய்யப்பட்ட தொகைக்கு மேலாக டெபாசிட்செய்வதற்கோ (அல்லது) பணமெடுப்பதற்கோ 7 நாட்களுக்கு முன்னதாக பான்கார்டுக்கு விண்ணப்பித்திருக்க வேண்டியது அவசியம். அதே நேரம் ரொக்கமாக ரூபாய்.2 லட்சத்திற்கு மேல் பணபரிவர்த்தனை செய்வதும் முடியாது. உதாரணமாக ரூபாய்.3 லட்சத்துக்கு மேல் தங்கநகைகளை வாங்கும்போது ரொக்கமாக செலுத்தாமல் செக், கிரெடிட்கார்டு, டெபிட்கார்டு (அல்லது) வங்கி டிரான்ஸாக்ஷன் வாயிலாக மட்டும்தான் கட்டணத்தை செலுத்தவேண்டும்.
அதிக மதிப்புள்ள பரிவர்த்தனைகளில் ரொக்கப் பரிவர்த்தனையை கட்டுப்படுத்தும் வகையில் அரசு ரூபாய்.2 லட்சத்திற்கு மேல் ரொக்க பரிவர்த்தனை செய்யக்கூடாது என்ற விதிமுறையை விதித்து இருக்கிறது. உங்களது குடும்பஉறுப்பினர் (அல்லது) உறுப்பினர்களிடம் இருந்து பணம் பெறும்போதும் நீங்கள் இந்த விதிமுறைகளை பின்பற்ற வேண்டும். ஒரே சமயத்தில் யாரிடம் இருந்தும் ரூபாய்2 லட்சத்திற்கு மேலான ரொக்கபரிசை பெற்றுக்கொள்ளகூடாது. அவ்வாறு பெற்றால் அவற்றிற்கு அபராதம் விதிக்கப்படும். ஒருவர் ஒருவரிடம் இருந்து ரூபாய்.20,000க்கு மேல் கடன் பெற்றுக்கொள்ளகூடாது. அதேநேரம் சொத்து பரிவர்தனைகளிலும் ரூ.20,000 மட்டுமே ரொக்கமாக அனுமதிக்கப்படும். அத்துடன் வரிசெலுத்துவோர் காப்பீட்டு பிரீமியத்தை ரொக்கமாக செலுத்தாமல் வங்கி வாயிலாக மட்டுமே செலுத்தவேண்டும். அதுபோன்று அவர்கள் ரொக்கமாக செலுத்தினால் பிரிவு 80டி விலக்குக்கு தகுதியற்றவர்களாக கருதப்படுவர்.