உத்திர பிரதேச மாநிலத்தில் சட்டமன்ற தேர்தல் வருகின்ற பிப்ரவரி 10-ஆம் தேதி முதல் மார்ச் 7-ஆம் தேதி வரை ஏழு கட்டமாக நடைபெற உள்ளது. இந்த நிலையில் ஆளும் கட்சியான பாஜக ஆட்சியை தக்க வைத்து கொள்வதற்காக பல முயற்சிகளை மேற்கொண்டு வருகிறது. அதேபோல் மறுபக்கம் காங்கிரஸ் கட்சியை சேர்ந்த பிரியங்கா காந்தி தலைமையில் தேர்தலில் வெற்றி பெறுவதற்கான பல்வேறு வியூகங்கள் வகுக்கப்பட்டு வருகிறது.
இந்த நிலையில் காங்கிரஸ் மூத்த தலைவரும், முன்னாள் முதல்வருமான கமல்நாத் “அண்மையில் நான் உத்திரபிரதேசம் சென்றிருந்தேன். அங்கு பொதுமக்கள் ஆளும் கட்சிக்கு எதிராக இருப்பதை என்னால் உணர முடிந்தது. எனவே பிரியங்கா காந்தி உத்தரபிரதேசத்தில் மேற்கொள்ளும் முயற்சிகள் பெரிய மாற்றத்தை கொண்டுவரும்” என நம்புவதாக தெரிவித்துள்ளார்.
அதோடு மட்டுமில்லாமல் சட்டமன்ற தேர்தல் முடிவுகள் அனைவரையும் ஆச்சரியப்படுத்தும் விதமாக இருக்கும். அதிலும் குறிப்பாக காங்கிரஸ் கட்சி நினைத்தது நடந்தே தீரும் என்று கமல்நாத் கூறியுள்ளார். மேலும் உத்திர பிரதேச சட்டமன்ற தேர்தலில் காங்கிரஸ் ‘சர்ப்பிரைஸ்’ கொடுக்கும். ஒட்டுமொத்த மாநில மக்களும் ஆச்சரியப்படும் விதமாக இந்த தேர்தலின் முடிவுகள் அமையும் என்று அவர் கூறியுள்ளார்.
அதேசமயம் பிரச்சாரங்களும், விளம்பரங்களும் செய்வதால் மட்டுமே இந்த தேர்தலில் வெற்றி பெற்று விட முடியாது. ஆளுங்கட்சி செய்யும் தவறுகளை அனைவரும் நன்றாக அறிவார்கள். எனவே மக்களை யாராலும் ஏமாற்ற முடியாது. அந்த வகையில் பிரியங்கா காந்தியால் உத்தரப்பிரதேச மாநிலத்தில் காங்கிரஸ் கட்சி எழுச்சி பெறும் என்று கமல்நாத் திட்டவட்டமாக கூறியுள்ளார்.