தண்ணீரில் மூழ்கி தந்தை, மகன் உயிரிழந்த சம்பவம் சோகத்தை ஏற்படுத்தியுள்ளது.
திண்டுக்கல் மாவட்டத்தில் உள்ள பாப்பிநாயக்கன்பட்டி பகுதியில் தனியார் நிறுவன ஊழியரான ராஜ்குமார் என்பவர் வசித்து வருகிறார். இவருக்கு தவமணி என்ற மனைவி உள்ளார். இந்த தம்பதியினருக்கு விபுல்குமார்(15) என்ற மகன் இருந்துள்ளார். இவர் தனியார் பள்ளியில் பத்தாம் வகுப்பு படித்து வந்துள்ளார். இந்நிலையில் விடுமுறை தினத்தை முன்னிட்டு தனது மகனுக்கு நீச்சல் கற்றுக் கொடுப்பதற்காக அப்பகுதியில் இருக்கும் தோட்டத்து கிணற்றுக்கு ராஜ்குமார் அழைத்து சென்றுள்ளார். அங்கு மகனை பிடித்தபடி ராஜ்குமார் நீச்சல் கற்றுக் கொடுத்த போது எதிர்பாராதவிதமாக தண்ணீரில் விபுல்குமார் மூழ்கியுள்ளார்.
அப்போது தனது தந்தையை விபுல்குமார் இறுக்கமாக பிடித்ததால் இருவரும் வெளியே வர முடியாமல் தண்ணீரில் மூழ்கினர். இது குறித்து அறிந்த தீயணைப்பு வீரர்கள் சம்பவ இடத்திற்கு விரைந்து சென்று நீண்ட நேர போராட்டத்திற்கு பிறகு தந்தை மகனின் உடல்களை மீட்டனர். பின்னர் இருவரின் உடல்களும் நிலக்கோட்டை அரசு மருத்துவமனை பிரேத பரிசோதனைக்காக அனுப்பி வைக்கப்பட்டது. இந்த சம்பவம் குறித்து வழக்கு பதிவு செய்த போலீசார் விசாரணை நடத்தி வருகின்றனர்.