தண்ணீரில் மூழ்கி சிறுவன் பலியான சம்பவம் சோகத்தை ஏற்படுத்தியுள்ளது.
தர்மபுரி மாவட்டத்தில் உள்ள திருமலைகவுண்டன்கொட்டாய் பகுதியில் மாதையன் என்பவர் வசித்து வருகிறார். இவருக்கு பூவரசன்(13) என்ற மகன் இருந்துள்ளார். இந்த சிறுவன் அரசு பள்ளியில் ஏழாம் வகுப்பு படித்து வந்துள்ளார். நேற்று பூவரசன் தனது நண்பர்களுடன் விளையாடிக் கொண்டிருந்தார். பின்னர் சிறுவர்கள் மாது என்பவரது விவசாய கிணற்றுக்கு சென்று குளித்து கொண்டிருந்தனர்.
அப்போது நீச்சல் பழகிய பூவரசன் தண்ணீரில் மூழ்கியதை பார்த்து அதிர்ச்சியடைந்த சிறுவர்கள் ஊருக்கு சென்று பொதுமக்களிடம் விவரத்தை தெரிவித்தனர். இதுகுறித்து அறிந்த தீயணைப்பு வீரர்கள் சம்பவ இடத்திற்கு விரைந்து சென்று சுமார் 2 மணி நேர போராட்டத்திற்கு பிறகு சிறுவனின் உடலை மீட்டனர். பின்னர் போலீசார் சிறுவனின் உடலை கைப்பற்றி அரசு மருத்துவமனைக்கு பிரேத பரிசோதனைக்காக அனுப்பி வைத்தனர். இந்த சம்பவம் குறித்து வழக்கு பதிந்த போலீசார் விசாரணை நடத்தி வருகின்றனர்.