உக்ரைன் மீதான ரஷ்யாவின் போர் 4-வது நாளாக தொடர்ந்து நடைபெற்று வருகிறது. இதனால் போலந்து, ருமேனியா, அங்கேரி, சுலோவாக்கியா உள்ளிட்ட நாடுகளுக்கு 1 லட்சத்திற்கும் அதிகமான மக்கள் உக்ரைனில் இருந்து சென்றுள்ளனர். இந்நிலையில் தலைநகர் கீவ்வில் ரஷ்ய படைகளுக்கு எதிராக உக்ரைன் பொதுமக்கள் ஆயுதங்களுடன் தெருக்களில் இறங்கியுள்ளனர். அதாவது அதிபர் செலன்ஸ்கி விடுத்த வேண்டுகோளை ஏற்று உக்ரைன் ராணுவத்துக்கு உதவியாக பெரும்பாலான பொதுமக்கள் ரஷ்ய படைகளை எதிர்த்து போரிட்டு வருகின்றனர்.
தற்போது அங்கு பொதுமக்கள் நவீனரக துப்பாக்கி, ராக்கெட் லாஞ்சர், கையெறிகுண்டு உள்ளிட்ட ஆயுதங்களுடன் தெருக்களில் சுற்றி வருகின்றனர். அத்துடன் வக்கீல்கள், டாக்டர்கள், ஐ.டி. ஊழியர் என அனைத்து தரப்பு மக்களும் கீவ் நகர தெருக்களில் ஆயுதங்கள் ஏந்தி இருப்பதை காண முடிந்தது. இதனிடையே நாட்டை விட்டு வெளியேறிய உக்ரைன் பொதுமக்களில் ஆயிரகணக்கானோர் திரும்பி வந்து கொண்டிருக்கிறார்கள். அவர்கள் தங்களது சொந்த மண்ணை காப்பாற்றுவதற்காக கையில் ஆயுதங்களை ஏந்தி ரஷிய படைகளுடன் போர் செய்து வருகிறார்கள். இவ்வாறு பொதுமக்களின் பலத்த ஆதரவு உக்ரைன் படைகளுக்கு ஊக்கத்தை ஏற்படுத்தியுள்ளது..