உக்ரைன் மீது ரஷ்யா தொடுத்துள்ள போர் 18-வது நாட்களாக நீடித்து வருகிறது. தலைநகர் கீவை ரஷ்யப்படைகள் சுற்றி வளைப்பதில் தீவிரம் காட்டி வருகின்றன. அங்கு அவ்வப்போது வான் தாக்குதல்கள் நடைபெறுகின்றன. இதன் காரணமாக அங்கு பாதுகாப்பு தொடர்பான அச்சுறுத்தல் ஏற்பட்டுள்ளது. இந்நிலையில் கீவ் நகரிலுள்ள இந்திய தூதரகத்தை தற்காலிகமாக போலந்து நாட்டுக்கு மாற்றுவது என்று மத்திய அரசு முடிவு செய்துள்ளது.
இது குறித்து மத்திய வெளியுறவு அமைச்சகம் வெளியிட்ட அறிவிப்பில் “உக்ரைனில் நாட்டின் மேற்குப் பகுதிகள் உள்பட தாக்குதல்களால் அதிவேகமாக பாதுகாப்பு நிலைமை மோசம் அடைந்து வருகிறது. இதன் காரணமாக உக்ரைனிலுள்ள இந்திய தூதரகத்தை தற்காலிகமாக போலந்துக்கு இடமாற்றம் செய்வது என்று முடிவு செய்யப்பட்டுள்ளது” என்று கூறப்பட்டுள்ளது. அதனை தொடர்ந்து நிலைமையின் முன்னேற்றத்துக்கேற்ப இது மறுமதிப்பீடு செய்யப்படும் எனவும் தெரிவிக்கப்பட்டுள்ளது.