உக்ரைன் மீதான ரஷ்யாவின் போர் 6 மாதங்களை கடந்து நீண்டுகொண்டே செல்கிறது. பிப்ரவரி 24 ஆம் தேதி துவங்கிய இப்போரால் உக்ரைனில் உள்ள பொதுமக்கள், வீரர்கள் என பல தரப்பினரும் பாதிக்கப்பட்டுள்ளனர். அவர்களை இழந்து குடும்பத்தினர் மற்றும் சொந்தங்கள் தவித்து வருகின்றனர். அந்நாட்டின் கல்விநிலையங்கள், வீடுகள், வணிக வளாகங்கள் ஆகிய கட்டிடங்கள் உருக்குலைந்து போயுள்ளது. தொடக்கத்தில் இருதரப்பினருக்கு இடையில் நடைபெற்ற பேச்சுவார்த்தையும் தோல்வியிலேயே முடிந்தது. உக்ரைன் போரில் பெண்கள் மற்றும் குழந்தைகள் அதிகளவில் பாதிக்கப்பட்டு வருகின்றனர்.
இதற்கிடையில் சிறுமிகள், பெண்களுக்கு ரஷ்ய வீரர்களால் பாலியல் வன்கொடுமைகளும் நிகழ்த்தப்படுகிறது என அவ்வப்போது குற்றச்சாட்டுகள் எழுந்தது. இப்போரால் பெரியவர்களைவிட சிறுவர், சிறுமிகள் அதிகம் பாதிக்கப்பட்டுள்ளனர் என ஐ.நா.வின் சர்வதேச குழந்தைகளுக்கான அவசர கால நிதி அமைப்பு (யுனிசெப்) வேதனை தெரிவித்துள்ளது. உக்ரைனுக்கு எதிரான போருக்கு மத்தியில் ரஷ்ய படையில் 1.37 லட்சம் வீரர்களின் எண்ணிக்கையை அதிகரிக்க அதிபர்புதின் உத்தரவு பிறப்பித்துள்ளார். இதன் காரணமாக படை வீரர்களின் மொத்த எண்ணிக்கையானது 11.5 லட்சம் என்ற அளவில் உயரும்.
இது தவிர்த்து சில கைதிகளை கூட ராணுவ பணியின் ஒருபகுதியாக படையில் சேர வரும்படி அழைப்பு விடப்பட்டுள்ளது என ரஷ்ய ஊடகங்கள் தெரிவித்துள்ளது. இது தொடர்பாக அமெரிக்க பாதுகாப்புதுறையின் மூத்த அதிகாரி ஒருவர் கூறியதாவது “உக்ரைனுக்கு எதிரான போரில் வீரர்களை கண்டறிய ரஷ்யா போராடி வருகிறது. ரஷ்ய அதிபர் புதின் தன் படையில் 1.30 லட்சம் வீரர்களின் எண்ணிக்கையை அதிகரிப்பதற்கான சமீபத்திய முயற்சியில், அவர் வெற்றி பெறுவார் என அமெரிக்க அரசு கருதவில்லை. உக்ரைன் மீது ரஷ்யா போர் தொடுக்கும் முன்னதாகவே ரஷ்யபடை வீரர்களின் எண்ணிக்கைக்கான இலக்கை அவர்கள் அடையவில்லை.
அதாவது அப்போதே அவர்களிடம் 1.50லட்சம் வீரர்கள் பற்றாக்குறையாக இருந்தனர். இதனால் புது வீரர்களை சேர்ப்பதில் அதிகபட்ச வயது தளர்வு நீக்கம், கைதிகளை பணியில் சேர்ப்பது உள்ளிட்ட ஆள் சேர்ப்பு பணியை விரிவுபடுத்தும் முயற்சியில் ஈடுபட்டனர். இப்புதிய ஆள் சேர்ப்பில் இருப்பவர்களில் பலர் வயது முதிர்ந்த, வேலைக்கு தகுதியற்ற மற்றும் சரியான பயிற்சி அளிக்கப்படாதவர்களாகவே காணப்படுகின்றனர். இதன் காரணமாக இவை அனைத்திலும் இருந்து எங்களுக்கு தெரியவருவது என்னவென்றால், கூடுதல் வீரர்களை ஆண்டு இறுதிக்குள் சேர்ப்பது என்ற ரஷ்யாவின் இலக்கு பூர்த்தியடையாது” என கூறியுள்ளார்.