மருத்துவப் படிப்புகளில் மாணவ மாணவிகள் சேருவதற்கு இந்திய அளவில் நடத்தப்படும் மருத்துவ தகுதித்தேர்வு நீட். கொரோனா தொற்று காரணமாக கடந்த ஆண்டு நீட் தேர்வு நடத்துவதில் தாமதம் ஏற்பட்டது. இருப்பினும் கடந்த ஆண்டு செப்டம்பர் 13ஆம் தேதி தேர்வு நடத்தப் பட்டது. இந்த ஆண்டு ஆகஸ்டு 1ஆம் தேதி நீட் தேர்வு நடத்தப்படும் என்று அறிவிக்கப்பட்டது. நீட் தேர்வுக்கான விண்ணப்பம் செய்யும் நடவடிக்கைகள் தொடங்கப்படாமல் இருந்த நிலையில் தற்போது சமூகவலைத்தளங்களில் விண்ணப்பிக்கும் முறையை மத்திய அரசு அறிமுகம் செய்துள்ளது.
இந்நிலையில், நீட் தேர்வு தொடர்பான அறிவிப்பு இன்று வெளியாகி உள்ளது. இளநிலை மருத்துவ படிப்புகளுக்கு நாடு முழுவதும் செப்டம்பர் 12-ல் நீட் தேர்வு நடத்தப்படும் என்று மத்திய கல்வித்துறை மந்திரி தர்மேந்திர பிரதான் அறிவித்துள்ளார். அதன்படி நீட் தேர்வுக்கு விண்ணப்பிக்கும் நடைமுறை நாளை மாலை 5 மணி முதல் நீட் தேசிய தேர்வு இணையதளம் மூலம் தொடங்கும் . இந்நிலையில் தற்போது நீட் தேர்வுக்கான அதிகாரபூர்வ அறிவிப்பு வந்துவிட்டது. அறிவிப்புக்கு முன்கூட்டியே தமிழ்நாடு அரசு நீட் தேர்வு குறித்த தனது நிலையை அறிவித்திருக்க வேண்டும். இப்போது எடுக்கும் ஒவ்வொரு முடிவும் மாணவர்களை நேரடியாக பாதிக்கும். இந்நிலையில் திமுக அரசு என்ன செய்யப்போகிறது? ஒன்றிய அரசுடன் சண்டையிட தயாராக இல்லையா? என்று சமூக வலைத்தளங்களில் பலரும் தங்களது கேள்விகளை எழுப்பி வருகின்றனர்.