தமிழகத்திற்கு முல்லை பெரியாறு அணையானது தேனி, மதுரை, திண்டுக்கல், சிவகங்கை, ராமநாதபுரம் ஆகிய 5 மாவட்டங்களுக்கு விவசாயம் மற்றும் குடிநீர் தேவைக்கான முக்கிய ஆதாரமாக விளங்குகிறது. இந்த அணையில் இருந்து அதிகபட்சமாக 142 அடி நீரைத் தேக்கி வைத்துக் கொள்ளலாம் என உச்சநீதிமன்றம் தீர்ப்பு வழங்கியுள்ளது. இந்த உத்தரவை கடந்த ஆட்சியில் கடைபிடிக்கப்பட்டு வந்தது. தற்போது திமுக ஆட்சிக்கு வந்திருக்கும் நிலையில் முல்லை பெரியாறு அணை 142 அடி நீரை எட்டுவதற்கு முன்னதாகவே கேரளா அமைச்சர்கள் நீர்வளத்துறை அதிகாரிகள் முன்னிலையில் தண்ணீரை திறந்து விட்டதாக புகார் எழுந்துள்ளது.
5 மாவட்டங்களில் உள்ள மக்களின் நிலைமையை கருத்தில் கொள்ளாமல் தமிழக அரசு கேரளாவிற்கு துணை போகிறது என்றும் பல கட்சியினர் குற்றம் சாட்டி வருகின்றனர். இதனால் வரும் 9-ஆம் தேதி 5 மாவட்டங்களில் திமுக அரசின் செயல்பாட்டைக் கண்டித்து போராட்டம் நடத்தவுள்ளதாக அதிமுக தலைமை நிர்வாகம் அறிவித்துள்ளது. இந்நிலையில் முல்லை பெரியாறு அணையின் உண்மை நிலவரம் குறித்து ஆய்வு செய்வதற்காக நீர்வளத்துறை அமைச்சர் துரைமுருகன் இன்று மதுரை புறப்பட்டார்.
சென்னை விமான நிலையத்தில் செய்தியாளர்களிடம் அவர் தெரிவித்ததாவது: “வடகிழக்கு பருவமழை காரணத்தால் அனைத்து அணைகள், அணைக்கட்டுகள் நிலை குறித்து ஆய்வு செய்யப்படுகிறது. அந்த வகையில் முல்லை பெரியாறு அணையை ஆய்வு செய்ய போகிறேன். முல்லைப் பெரியாறு அணையை நேரில் சென்று ஆய்வு செய்யாமல் அதிமுக போராட்டம் செய்யப்போவதாக அறிவித்து இருப்பது வேடிக்கையாக உள்ளது. நீட் தேர்வுக்கு எதிராக கருத்து தெரிவிக்க தைரியம் இல்லாத அதிமுக அரசு முல்லை பெரியாறு அணைக்கு எதிராக போராட்டம் நடத்துவதா?” என்று கேள்வியும் எழுப்பியுள்ளார்.