நாடு முழுவதும் நீட் தேர்வு கடந்த ஜூலை மாதம் நடைபெற்றது. இந்த தேர்வு முடிவுகள் கடந்த 7-ம் தேதி வெளியான நிலையில், 56.3% பேர் தேர்ச்சி அடைந்துள்ளனர். இந்த தேர்வை தமிழகத்தை சேர்ந்த 1,32,167 மாணவர்கள் எழுதியிருந்தனர். இதில் 67,787 பேர் தேர்ச்சி பெற்றுள்ளனர். இதில் அரசு பள்ளி மாணவர்கள் எத்தனை பேர் தேர்வு எழுதினார்கள் எவ்வளவு பேர் தேர்ச்சி பெற்றார்கள் என்ற விவரத்தை இதுவரை வெளியிடாமல் இருந்த நிலையில், தற்போது தேர்ச்சி விகிதம் குறித்த தகவல் வெளியாகியுள்ளது. அதன்படி 17,972 பேர் விண்ணப்பித்து இருந்த நிலையில், 12,840 பேர் தேர்வு எழுதியுள்ளனர். இவர்களில் 4,447 பேர் மட்டுமே தேர்ச்சி பெற்றுள்ளனர்.
இது 35 சதவீதம் ஆகும். கடந்த 2018-ம் ஆண்டு முதல் அரசு பள்ளி மாணவர்களின் தேர்ச்சி விகிதம் 22.06%, 25.83%, 24.27% இருந்த நிலையில், நடப்பாண்டில் தேர்ச்சி விகிதம் 35 சதவீதமாக அதிகரித்துள்ளது. இந்நிலையில் மதுரை, பெரம்பலூர், நீலகிரி, சேலம், விருதுநகர் மற்றும் விழுப்புரம் உள்பட 6 மாவட்டங்களில் நீட் தேர்வு எழுதிய அனைத்து மாணவர்களும் தேர்ச்சி பெற்றுள்ளனர். இதனையடுத்து சென்னையில் 172 பேர் தேர்வு எழுதியதில் 104 பேர் தேர்ச்சி பெற்றுள்ளனர். மேலும் மற்ற மாவட்டங்களில் 20 முதல் 25 சதவீதம் வரை தேர்ச்சி பெற்றுள்ள நிலையில், திருப்பத்தூர் மாவட்டத்தில் குறைந்தபட்சமாக 7 சதவீதம் பேர் மட்டுமே தேர்ச்சி பெற்றுள்ளனர்.