இந்த வருடத்திற்கான நீட் தேர்வு இலவச பயிற்சி வகுப்புகள் வருகின்ற நவம்பர் 1ஆம் தேதி முதல் தொடங்க உள்ளதாக பள்ளிக் கல்வித்துறை அறிவித்துள்ளது.
மருத்துவ படிப்புகளில் சேர்வதற்கான நீட் தேர்வு நடந்து கொண்டிருக்கிறது. அதில் இருந்து விலக்கு அளிக்க வேண்டும் என்று தமிழக அரசு தொடர்ந்து போராட்டம் நடத்தி வருகிறது. இந்நிலையில் மாணவர்கள் அனைவரும் தேர்வை எதிர்கொள்ளும் வகையில் அரசு மற்றும் அரசு உதவி பெறும் பள்ளி மாணவர் மற்றும் மாணவிகளுக்கு பள்ளி கல்வித்துறை நீட் தேர்வு இலவச பயிற்சி வகுப்புகள் நடத்த முடிவு செய்துள்ளது. அவ்வகையில் கடந்த ஆண்டு இ-பாக்ஸ் என்ற நிறுவனம் மூலம் நீட் தேர்வு இலவச பயிற்சி வகுப்புகள் நடத்தப்பட்டன.
அவ்வாறு பயிற்சி பெற்ற மாணவர்கள் கடந்த செப்டம்பர் மாதம் 13ம் தேதி நடந்த நீட் தேர்வில் கலந்து கொண்டு தேர்வு எழுதினார்கள். அவர்களில் 1633 பேர் தேர்ச்சி அடைந்துள்ளனர். இதனைத் தொடர்ந்து இந்த வருடத்திற்கான நீட் தேர்வு பயிற்சி வகுப்புகள் தொடங்க உள்ளன. இதுபற்றி பள்ளிக்கல்வி இயக்குனர் கண்ணப்பன், அனைத்து மாவட்ட முதன்மை கல்வி அலுவலர்களுக்கு அனுப்பியுள்ள அறிக்கையில், ” கடந்த வருடத்தைப் போலவே இந்த வருடம் இலவச நீட் தேர்வு பயிற்சி வகுப்புகளை இ-பாக்ஸ் நிறுவனம் நடத்துவதற்கு முடிவு செய்துள்ளது.
அதற்கான பயிற்சி வகுப்புகள் வருகின்ற நவம்பர் மாதம் ஒன்றாம் தேதி முதல் ஆன்லைன் மூலமாக தொடங்கப்பட உள்ளது. இலவச பயிற்சி வகுப்புகளில் சேர விரும்புகின்ற மாணவ மாணவிகள் பெயர், முகவரி மற்றும் செல்போன் எண் போன்ற விவரங்களை பெற்று உடனடியாக பள்ளி கல்வி இயக்ககத்திற்கு அனுப்ப வேண்டும். இந்த இலவச ஆன்லைன் நீட் தேர்வு பயிற்சி வகுப்புகளை அனைத்து பள்ளி தலைமை ஆசிரியர்கள் வெற்றிகரமாக நடத்தி முடிக்க வேண்டும்” என்று அவர் கூறியுள்ளார்.