நீட் தேர்வு எழுதும் மாணவர்களுக்கு நாமக்கல் நகர பாஜக மற்றும் தனியார் பள்ளி இணைந்து தனியார் பயிற்சி மையத்தின் சார்பாக இலவச நீட் பயிற்சி வகுப்புகளை பாஜக தலைவர் அண்ணாமலை தொடங்கி வைத்தார். அதன் பிறகு மாணவர்களுக்கு நீட் பயிற்சி குறித்த கையேடுகளை அவர் வழங்கினார். இதையடுத்து செய்தியாளர்களை சந்தித்துப் பேசிய அவர், இந்த வருடம் தமிழகத்திற்கு சாதனை வருடம். இந்தியாவில் கிட்டத்தட்ட 18 லட்சம் பேரும் தமிழகத்தில் 1.42 லட்சம் பேரும் நீட் தேர்வு எழுதுகிறார்கள்.
தமிழகத்தில் கடந்த வருடத்தை ஒப்பிடுகையில் இது 30 ஆயிரம் அதிகம். அதுமட்டுமல்லாமல் இந்த வருடம் முதன் முதலாகத் தமிழ் மொழியில் 31,300 பேர் நீட் தேர்வு எழுதுகின்றனர். கடந்த ஏழு ஆண்டுகளில் இவ்வளவு அதிகமான மாணவர்கள் நீட் தேர்வு எழுதுவது மருத்துவ படிப்பிற்கு நீட் நம்பிக்கையை அதிகரித்துள்ளது. நீட் தேர்வு நடைமுறைக்கு வந்த பிறகு தான் ஒரே தேர்வு எழுதினால் அனைத்து மருத்துவக் கல்லூரிகளிலும் சேர முடியும் என்ற நிலைபாடு வந்துள்ளது.
இதனால் பின்தங்கிய பகுதிகளில் இருந்து வரும் மாணவர்கள் மருத்துவ கல்லூரிகளில் சேர்கின்றனர். இதன் மூலமாக சமவாய்ப்பு மற்றும் சமூக நீதி ஏற்படுத்தப்பட்டுள்ளது. வாழ்க்கை என்பதே ஒரே பரிட்சை மட்டும்தான். நீட் தேர்வை பார்த்து மாணவர்கள் யாரும் பயந்து விடக்கூடாது. ஒழுக்கம், கடின உழைப்பு,மன உறுதி மற்றும் விடா முயற்சியோடு படித்தால் கட்டாயம் மாணவ மாணவிகள் நல்ல மதிப்பெண்களைப் பெற முடியும் என்று அவர் தெரிவித்துள்ளார்.