தமிழ்நாட்டில் நீட் தேர்வு தொடர்ந்தால் சுகாதார கட்டமைப்பு சீர்குலைந்து விடும் என்று ஏ.கே ராஜன் குழு எச்சரிக்கை விடுத்துள்ளது.
தமிழ்நாட்டில் நீட் தேர்வால் ஏற்பட்ட பாதிப்புகள் குறித்து ஆய்வு செய்து அறிக்கை சமர்ப்பிக்க ஜூன் 10ஆம் தேதி நீதிபதி ஏ.கே ராஜன் தலைமையிலான குழு அமைக்கப்பட்டு இருந்தது. இந்த குழுவில் பாதிக்கப்பட்ட மாணவர்கள் தங்களுடைய கருத்தை தெரிவிக்கலாம் என்று அறிவித்து, அதற்கான ஆய்வுகளை மேற்கொண்டு வந்த நிலையில் கடந்த ஜூலை 14-ஆம் தேதி முதல்வரை சந்தித்து இது தொடர்பாக நடத்தப்பட்ட ஆய்வின்படி அறிக்கையை சமர்ப்பித்தது.
இந்நிலையில் தற்போது நீட்டால் ஏற்பட்ட பாதிப்புகள் குறித்து ஆய்வு செய்த அறிக்கையை தமிழக அரசு வெளியிட்டுள்ளது. அதில், தமிழகத்தில் இன்னும் நீட் தேர்வு தொடர்ந்தால், ஆரம்ப சுகாதார நிலையங்களில் நியமிக்கப்படுவதற்கு போதுமான மருத்துவர்கள் இருக்கமாட்டார்கள். அரசு மருத்துவமனைகளில் நியமிக்க நிபுணத்துவம் பெற்ற மருத்துவர்கள் இருக்க வாய்ப்பு இல்லாமல் போய்விடும். ஊரக நகர்ப்புற ஏழைகளுக்கு மருத்துவக் கல்வியில் சேர வாய்ப்பே இல்லாமல் போய்விடும் எனவும் எச்சரிக்கை விடுத்துள்ளது.