நீட் தேர்வு மாணவர் சேர்க்கையில் ஜிப்மர் மாணவர் சேர்க்கையை இறுதி செய்ய வேண்டாம் என்று கவர்னர் கிரண்பேடி வேண்டுகோள் விடுத்திருக்கிறார்.
புதுவையில் ஜிப்மர் மருத்துவ கல்லூரியில் எம்பிபிஎஸ் மருத்துவ படிப்பில் புதுவை மாநிலத்தை இருப்பிடமாக கொண்டவர்களுக்கு 64 இடங்கள் ஒதுக்கீடு செய்யப்பட்டுள்ளன. இந்த வருடம் நீட் தேர்வு மூலம் மாணவர் சேர்க்கை நடந்து கொண்டிருக்கும் நிலையில், தேர்வு பட்டியலில் புதுவை மாநில மாணவர்களின் இடத்தில் வேறு மாநிலத்தை சேர்ந்த 31 பேரின் பெயர்கள் இடம்பெற்றுள்ளன. அதனால் புதுவை மாநிலத்தை இருப்பிடமாகக் கொண்டு நீட் தேர்வு எழுதிய மாணவர்களின் பெயர்கள் அதில் இடம் பெறவில்லை.
இதுபற்றி முதல் அமைச்சர் நாராயணசாமி மற்றும் சுகாதாரத்துறை செயலாளர் ஆகியோருக்கு பல்வேறு புகார்கள் வந்தன. இதனிடையே அதிமுக சட்டமன்ற கட்சித் தலைவர் அன்பழகன், கவர்னர் கிரண் பேடியை நேரில் சந்தித்து புகார் அளித்தார். அந்தப் புகாரில் முறைகேடு நடந்து இருப்பதாக வும் இது பற்றி சிபிஐ விசாரணை நடத்த வேண்டும் எனவும் வலியுறுத்தியுள்ளார். இதுபற்றி கவர்னர் கிரண்பேடி வெளியிட்டுள்ள பதிவில், “போலி என கூறப்படும் ஆவணங்களின் சரிபார்ப்பு நிலுவையில் இருப்பதால் அத்தகையவர்களின் சேர்க்கையை இறுதி செய்ய வேண்டாம்” என்று ஜிப்மர் இயக்குனருக்கு கவர்னர் வேண்டுகோள் விடுத்துள்ளார்.