நீட் தேர்வில் நாமக்கல் மாவட்டத்தை சேர்ந்த கீதாஞ்சலி மற்றும் பிரவீன் ஆகியோர் மாநில அளவில் முதலிடம் பிடித்துள்ளனர்.
தேசிய அளவில் மருத்துவ படிப்பில் சேருவதற்கான ‘நீட்’ என்ற பெயரில் தேர்வு நடத்தப்பட்டு வருகிறது. இந்த நீட் தேர்வு ஆகஸ்ட் 1ஆம் தேதி நடத்த திட்டமிட்டிருந்த நிலையில் கொரோனா பரவல் காரணமாக ஒத்திவைக்கப்பட்டது. அதன்பிறகு செப்டம்பர் 12 ஆம் தேதி அன்று நடத்தப்பட்டு அதில் 16 லட்சம் பேர் தேர்வு எழுதினர். இந்நிலையில் தேசிய தேர்வு முகமை NEET UG 2021 முடிவை நேற்று இரவு வெளியிட்டுள்ளது. அதனை விண்ணப்பதாரர்கள் neet.nta.in என்ற அதிகார பூர்வமான இணையதளத்தின் முலம் முடிவை தெரிந்து கொள்ளலாம்.
அதில் தெலுங்கானாவை சேர்ந்த மிருணால் குட்டேரி, டெல்லியை சேர்ந்த தன்மய் குப்தா மற்றும் மகாராஷ்டிராவை சேர்ந்த கார்த்திக் ஜி நாயர் ஆகியோர் 720 மதிப்பெண்கள் பெற்று முதலிடம் பிடித்துள்ளனர். அதைத்தொடர்ந்து உத்தரப் பிரதேசம் மாநிலம் ஆக்ராவை சேர்ந்த நிகர் பன்சால் இந்திய அளவில் 5வது இடத்தை பெற்றுள்ளார். அதனைத் தொடர்ந்து தமிழகத்தில் நாமக்கல் மாவட்டத்தைச் சேர்ந்த மாணவி கீதாஞ்சலி மற்றும் மாணவர் பிராவின் 710 மதிப்பெண்கள் பெற்று மாநில அளவில் முதலிடம் பிடித்துள்ளனர். மேலும் அர்ச்சித்தா என்ற மாணவி 705 மதிப்பெண்கள் பெற்று மாநில அளவில் 2வது இடம் பிடித்துள்ளார். இந்த நீட் தேர்வு மொத்தம் 720 மதிப்பெண்களுக்கு நடத்தப்படுகிறது.