நீட் தேர்வு அச்சத்தினால் மேட்டூரை சேர்ந்த மாணவர் தனுஷ் குடும்பத்திற்கு அதிமுக சார்பாக 10 லட்சம் ரூபாய் நிதியுதவி வழங்கப்பட்டது. இதுதொடர்பாக அதிமுக ஒருங்கிணைப்பாளர் ஓ.பன்னீர்செல்வம் மற்றும் இணை ஒருங்கிணைப்பாளர் எடப்பாடி பழனிச்சாமி ஆகியோர் கூட்டாக வெளியிட்டுள்ள அறிக்கையில், சேலம் மாவட்டத்தைச் சேர்ந்த விவசாயி சிவக்குமார் என்பவருடைய மகன் தனுஷ் என்பவர் திமுகவின் பொய்யான தேர்தல் வாக்குறுதிகளில் ஒன்றான நீட் தேர்வுக்கு விலக்கு என்பதை நம்பி மேல்நிலைத் தேர்வில் நல்ல மதிப்பெண் பெற்றார்.
இருப்பினும் இந்த அரசால் நீட் தேர்வில் இருந்து விலக்கு பெற இயலாது என்பதை நாள்தோறும் எண்ணி மனம் நொந்து, வாழ்க்கையில் பல நிலைகளை கடந்து சாதித்து இந்த நாட்டிற்காகவும், தமிழக மக்களுக்காக மருத்துவ சேவை செய்ய வேண்டும் என்ற எண்ணத்தோடு வாழ்ந்து வந்த தனுஷ் தன்னுடைய உயிரை மாய்த்துக் கொண்டார். தனுஷின் மரணத்திற்கு திமுக அரசு தான் முழு பொறுப்பேற்க வேண்டும். மேலும் தனுஷ் குடும்பத்திற்கு ஒரு கோடி ரூபாய் நிதியுதவியும், அவருடைய குடும்பத்தில் தகுதியுள்ள ஒருவருக்கு அரசு வேலை வழங்கும் வேண்டும் என்றும் தெரிவித்துள்ளது.