தமிழகத்திற்கு நீட் தேர்வில் இருந்து விலக்கு அளிப்பது தொடர்பாக அனைத்துக் கட்சி கூட்டம் திமுக தலைமையில் கூட்டப்பட்டு வலுவான தீர்மானம் நிறைவேற்றப்பட்டது. இந்த தீர்மானம் குடியரசுத் தலைவரின் ஒப்புதலுக்காக ஆளுநர் மாளிகைக்கு அனுப்பி வைக்கப்பட்டது. ஆளுநர் இந்த தீர்மானத்தை குடியரசுத் தலைவருக்கு அனுப்பாமல் 140 நாட்கள் கிடப்பில் போட்டு பின்னர் அதனை தமிழக அரசுக்கு திருப்பி அனுப்பி வைத்தார். இதனைத் தொடர்ந்து சட்டசபையில் நீட் தேர்வுக்கு எதிராக வலுவான மசோதா தாக்கல் செய்யப்பட்டது.
இதனையடுத்து அந்த மசோதா கவர்னர் மாளிகைக்கு அனுப்பி வைக்கப்பட்டது. இந்நிலையில் நீட் தேர்வில் இருந்து விலக்கு பெறுவதற்கான அவசியம் குறித்து முதலமைச்சர் ஸ்டாலின் மனம் திறந்து பேசியுள்ளார். அதில் அவர் கூறியதாவது ,”எமது போராட்டம் தமிழ்நாட்டுக்கு மட்டும் சிறப்பு விலக்கு கோருவதற்கானதன்று; பாகுபாடு காட்டும் – பயிற்சி நிறுவனங்களால் தூக்கி பிடிக்கப்படும் நீட் தேர்வால் துரத்தியடிக்கப்படும் விளிம்புநிலை மற்றும் வாய்ப்பு மறுக்கப்பட்டோருக்கு சமமான போட்டிக் களத்தை உறுதி செய்வதே ஆகும். இந்தியாவில் கூட்டாட்சியியலை வலுப்படுத்த போராடுவோம்” என்று முதல்வர் தனது ட்விட்டர் பக்கத்தில் கூறியுள்ளார்.