தமிழகத்தில் மருத்துவ மாணவர் சேர்க்கையில் நீட்தேர்வு முறையானது சமுதாயத்தில் பின்தங்கிய நிலையில் உள்ள மாணவர்களுக்கு கடந்த சில ஆண்டுகளாக பாதிப்புகளை ஏற்படுத்தியுள்ளது. அவ்வாறு பின்தங்கிய மாணவர்களுக்கு பாதிப்பு ஏற்பட்டிருந்தால் அவற்றை சரிசெய்யும் வகையில் இம்முறை க்கு மாற்றாக அனைவரும் பயன்பெறும் வகையிலான மாணவர் சேர்க்கை முறைகளை வகுத்து அவற்றை நடைமுறைப் படுத்துவதற்கான சாத்தியக் கூறுகள் பற்றியும், அவற்றிற்கான சட்ட வழிமுறைகள் பற்றியும் முழுமையாக ஆராய்ந்து அரசுக்கு பரிந்துரை களை அளித்திட ஓய்வு பெற்ற நீதிபதி ராஜன் அவர்கள் தலைமையில், கல்வியாளர்கள் மற்றும் சம்பந்தப்பட்ட அலுவலர்கள் அடங்கிய உயர்நிலைக் குழு ஒன்று அமைக்கப்படும் என தமிழக முதல்வர் ஸ்டாலின் அறிவித்தார்.
இந்நிலையில் நீட் தேர்வின் தாக்கம் குறித்து ஒரு மாதத்தில் அறிக்கை தாக்கல் செய்ய ஓய்வு பெற்ற நீதிபதி ராஜன் தலைமையில் 9 பேர் கொண்ட குழு அமைத்து முதல்வர் ஸ்டாலின் உத்தரவிட்டுள்ளார். இந்த குழு உரிய விவரங்களை ஆய்வு செய்து மாணவர்கள் நலனை பாதுகாத்திட தேவையான பரிந்துரைகளை ஒரு மாத காலத்திற்குள் அரசுக்கு அளிக்கும். இதனை ஆய்வு செய்து அடுத்த கட்ட நடவடிக்கைகளை அரசு மேற்கொள்ளும் என தெரிவித்துள்ளது.