சட்டசபையில் முதல்வர் மு.க.ஸ்டாலின் பேரவை விதி எண் 110-ன் கீழ் பேசியதாவது “7½ கோடி தமிழ் மக்களின் ஒட்டுமொத்த உணர்வையும் பிரதிபலிக்கும் நீட் தேர்வுக்கு விலக்கு கோரும் சட்ட மசோதா கடந்த 210 தினங்களாக கிண்டி கவர்னர் மாளிகை வளாகத்தில் முடங்கிக் கிடக்கிறது. நூற்றாண்டு பார்த்த தமிழக சட்டமன்றத்தில் ஒரு மனதாக நிறைவேற்றப்பட்ட அந்த சட்டமசோதா கிண்டி கவர்னர் மாளிகை வளாகத்தில் கிடக்கிறது. தமிழகமக்களின் உணர்வுகளைத் அடுத்து நாம் அனைத்து மன்றங்களிலும் எதிரொலிப்பதோடு, அவர்களது உரிமையையும் நிலைநாட்டுவோம்.
கவர்னர் திருப்பி அனுப்பிய மசோதாவை, இந்த சட்டமன்றத்தினுடைய சிறப்பு கூட்டத்தில் பிப்ரவரி 8-ந் தேதியன்று நிறைவேற்றி மீண்டும் நாம் அனுப்பி வைத்தோம். அவ்வாறு அனுப்பி 70 நாட்கள் ஆன நிலையில், நீட்விலக்கு மசோதாவை ஜனாதிபதிக்கு அனுப்பி வைக்க கவர்னர் முடிவு செய்துள்ளதாக ஊடகங்களில் செய்திகள் வந்து கொண்டிருக்கிறது. அது குறித்த நடவடிக்கைகளைப் பார்த்துவிட்டு தேவைப்பட்டால் அனைத்து சட்டமன்ற கட்சி தலைவர்களின் கூட்டத்தைகூட்டி அடுத்தகட்ட நடவடிக்கைகள் தொடர்பாக ஆலோசித்து முடிவெடுக்கப்படும் என்று அவர் கூறினார்.