நீட் தேர்வில் இருந்து விலக்கு பெறுவதற்காக தமிழக அரசு சட்டமன்றத்தில் தீர்மானம் நிறைவேற்றியது. பின்னர் தமிழக ஆளுநரின் ஒப்புதலுக்காக அந்த தீர்மானம் அனுப்பி வைக்கப்பட்டது. ஆனால் மத்திய அரசுக்கு அந்த மசோதாவை அனுப்ப கால தாமதப்படுத்தி வந்த ஆளுநர் ஆர்.என்.ரவி நீட் தேர்வு விலக்கு கோரி அனுப்பப்பட்ட மசோதாவை மீண்டும் தமிழக அரசுக்கு அனுப்பி வைத்துள்ளார். மேலும் ஆளுநர் ஆர்.என்.ரவி, “தமிழக அரசு அமைத்துள்ள நீட் உயர்மட்ட குழு அறிக்கை மற்றும் அதனை அடிப்படையாக கொண்டு இயற்றப்பட்ட மசோதாவை ஆய்வு செய்து பார்த்தோம்.
மேலும் நீட் தேர்வுக்கு பிந்தைய கால கட்டம் மற்றும் நீட் தேர்வுக்கு முந்தைய காலகட்டத்தில் மாணவர் சேர்க்கையை ஒப்பிட்டுப் பார்த்தோம். அப்படி பார்க்கும்போது அந்த மசோதா சமூகநீதிக்கு எதிரான மசோதாவாக உள்ளது” என்று விளக்கம் அளித்துள்ளார். ஆளுநரின் இந்த நடவடிக்கைக்கு அரசியல் கட்சியினர் பலரும் எதிர்ப்புகளை தெரிவித்து வருகின்றனர். எனவே ஸ்டாலின் தலைமையில் இந்த விவகாரம் தொடர்பாக அடுத்தகட்ட நடவடிக்கை எடுப்பது குறித்த அனைத்து கட்சிக் கூட்டம் நடைபெற்றது.
அதில் மீண்டும் நீட் விலக்கு மசோதாவை நிறைவேற்றி ஆளுநருக்கு அனுப்பி வைக்க தீர்மானம் நிறைவேற்றப்பட்டுள்ளது. மேலும் இதற்காக சட்டப்பேரவை சிறப்பு கூட்டத்தொடர் வருகின்ற 8-ஆம் தேதி நடைபெறும் என்றும் தகவல்கள் வெளியாகியுள்ளது. இந்த நிலையில் சட்ட நிபுணர்கள், தமிழக அரசு சார்பில் அனுப்பி வைக்கப்பட்ட மசோதாவை ஆளுநர் திருப்பி அனுப்பியுள்ளது தமிழக அரசுக்கு சாதகமாகவே இருப்பதாக கூறுகின்றனர்.
அதாவது, இந்திய அரசியல் சாசனத்தில் 200-வது பிரிவில் உள்ள விதிமுறைகளின்படி நீட் விலக்கு மசோதாவை ஒரு காரணத்துடன் ஆளுநர் திருப்பி அனுப்பி இருந்தால் அதனை திருத்தங்களுடன் மறுபரிசீலனை செய்து ஆளுநருக்கு தமிழக அரசு திருப்பி அனுப்பலாம். அதன் பிறகும் ஒப்புதல் அளிக்கப்படவில்லை என்றால் தமிழக அரசு ஆளுநரின் நிலைப்பாட்டை எதிர்த்து உச்சநீதிமன்றத்திற்கு செல்லலாம்.
அதேசமயம் இந்திய அரசியல் சாசனத்தின் பிரிவு 201-ஐ இந்த விவகாரத்தில் ஆளுநர் பயன்படுத்தவில்லை. ஒருவேளை அவர் அப்படி பயன்படுத்தி இருந்தால் குடியரசுத் தலைவர் நீட் மசோதாவை நிராகரிக்க வாய்ப்புள்ளது என்று சட்ட நிபுணர்கள் கூறுகின்றனர். ஆனால் அரசியல் சாசனத்தின் 200-வது பிரிவை தான் ஆளுநர் பயன்படுத்தியுள்ளார். அதன்படி தமிழக அரசு ஆளுநரால் திரும்பி அனுப்பப்பட்ட மசோதாவை திருத்தங்களுடன் மீண்டும் அனுப்பினால் அதற்கு ஆளுநர் ஒப்புதல் அளிப்பதை தவிர வேறு வழியே கிடையாது.
அதேபோல் இதற்கும் ஒப்புதல் அளிக்காமல் ஆளுநர் ஆர்.என்.ரவி குடியரசு தலைவருக்கு அனுப்பி வைத்தால் அரசியல் சாசனத்தின் 200-ஆவது பிரிவுக்கு இது முரணாகவே இருக்கும். ஆகவே இது தமிழக அரசுக்கு சாதகமாகவே இருக்கிறது என்று சட்ட நிபுணர்கள் கூறுகின்றனர். தமிழக அரசு தற்போதைய சூழலின்படி உச்ச நீதிமன்றத்திற்கு செல்ல தேவை இல்லை.
ஆனால் ஆளுநர் ஆர்.என்.ரவி தமிழகத்தின் நீட் மசோதா உச்சநீதிமன்ற தீர்ப்புக்கு எதிராக இருப்பதாக குறிப்பிட்டுள்ளார். இவ்வாறு உச்ச நீதிமன்றத்தின் தீர்ப்பை மீறி ஒரு சட்டம் இயற்றப்பட்டால் அது நீதிமன்ற அவமதிப்பு ஆகும். எனவே தமிழக அரசு இதனை கவனத்தில் கொண்டு அதற்கான பதிலுடன் மசோதாவை ஆளுநருக்கு அனுப்ப வேண்டும் என்று சட்ட நிபுணர்கள் தெரிவித்துள்ளனர்.