Categories
மாநில செய்திகள்

நீண்ட நாட்களாக தீர்க்கப்படாத 10 கோரிக்கைகள் என்ன?…. 15 நாட்களுக்குள் அனுப்ப….. சட்டமன்ற உறுப்பினர்களுக்கு முதல்வர் ஸ்டாலின் கடிதம்..!!

தொகுதியில் நீண்ட நாட்களாக தீர்க்கப்படாத 10 கோரிக்கைகளை தெரிவிக்க எம்எல்ஏக்களுக்கு முதலமைச்சர் மு.க ஸ்டாலின் உத்தரவிட்டுள்ளார்.

இதுகுறித்து வெளியிடப்பட்டுள்ள அறிக்கையில், சட்டமன்ற உறுப்பினர்கள் தங்கள் தொகுதியில் நீண்ட நாட்களாக தீர்க்கப்படாமல் உள்ள 10 முக்கியமான கோரிக்கைகளை முன்னுரிமைப்படுத்தி பட்டியல் அனுப்ப வேண்டும்.

அனைத்து சட்டமன்ற உறுப்பினர்களுக்கும் மாண்புமிகு தமிழ்நாடு முதலமைச்சர் திரு மு க ஸ்டாலின் அவர்கள் கடிதம் : 

திராவிட முன்னேற்றக் கழக அரசு பொறுப்பேற்று ஓராண்டு நிறைவு பெற்றதை ஒட்டி 07.05.2022 அன்று உங்கள் தொகுதியில் முதலமைச்சர் திட்டம் விரிவுபடுத்தப்படுவது குறித்த முக்கியமான அறிவிப்பினை மாண்புமிகு தமிழ்நாடு முதலமைச்சர் திரு மு க ஸ்டாலின் அவர்கள் சட்டப்பேரவையில் அறிவித்தார். இதற்காக இந்த ஆண்டே 1000 கோடி ரூபாய் நிதி ஒதுக்கீடு செய்யப்படும் என்றும் தெரிவித்து இருந்தார்.

அதன்படி தங்கள் தொகுதியில் நீண்ட நாட்களாக தீர்க்கப்படாமல் உள்ள 10 முக்கியமான கோரிக்கைகளை முன்னுரிமைப்படுத்தி, அடுத்த 15 நாட்களுக்குள் மாவட்ட ஆட்சித் தலைவர்களுக்கு பரிந்துரை பட்டியலை அனுப்பி வைக்குமாறு தமிழ்நாட்டில் உள்ள அனைத்து சட்டமன்ற உறுப்பினர்களும் மாண்புமிகு முதலமைச்சர் அவர்கள் இன்று (23. 08. 2022) கடிதம் எழுதியுள்ளார். அக்கடிதத்தின் விவரம் பின்வருமாறு :

இந்த அரசு பொறுப்பேற்று ஓராண்டு நிறைவு பெற்ற நிலையில் 07.05.2022 அன்று தமிழ்நாட்டை வளர்ச்சி பாதையில் அழைத்துச் செல்லக் கூடிய வகையில் உங்கள் தொகுதியில் முதலமைச்சர் உள்ளிட்ட மேலும் 5 புதிய திட்டங்களை தமிழ்நாடு சட்டப்பேரவையில் நான் அறிவித்ததை தங்களுக்கு அன்புடன் நினைவூட்ட விரும்புகிறேன்.

சட்டமன்ற உறுப்பினராகிய நாம் ஒவ்வொருவரும் நமது தொகுதியின் வளர்ச்சியிலும் மேம்பாட்டிலும் நமது பங்களிப்பினை ஆற்றுவதில் மிகுந்த அக்கறை கொண்டுள்ளோம். அந்த வகையில் மக்களின் தேவைகளை நன்கு உணர்ந்து அவற்றை நிறைவேற்றும் பெரும் பொறுப்பு அவர்களது பிரதிநிதிகளாக விளங்கும் சட்டமன்ற உறுப்பினர்களாகிய நமக்கு உள்ளது. குறிப்பாக சில தேவைகள் மக்களின் நீண்ட நாள் கோரிக்கையாக இருந்தும் நடைமுறையில் உள்ள திட்டங்களின் மூலம் அவற்றை செயல்படுத்திட இயலாத நிலை இருக்கலாம். மக்களின் இன்றியமையாத தேவையின் அடிப்படையில் ஆன அத்தகைய திட்டங்களுக்கான பணிகளை நிறைவேற்றிட திட்ட அறிக்கை தயாரித்து அரசு அளவில் ஒப்புதல் மற்றும் நிதி ஒதுக்கீடு பெற வேண்டிய அவசியமும் இருக்கலாம்.

இது போன்ற அத்தியாவசிய திட்டங்களை அனைத்து சட்டமன்ற தொகுதிகளிலும் நடைமுறைப்படுத்தக் கூடிய வாய்ப்பை உங்கள் தொகுதியில் முதலமைச்சர் திட்டம் உருவாக்கும். இத்திட்டத்தின் கீழ் ஒவ்வொரு தொகுதிகளும் நீண்ட காலமாக நிறைவேற்றப்படாத அவசிய பணிகள் குறித்து அந்தந்த தொகுதிகளின் சட்டமன்ற உறுப்பினர்களின் பரிந்துரைகளைப் பெற்று மாவட்ட ஆட்சியர் உள்ளிட்ட சம்பந்தப்பட்ட அதிகாரிகளுடன் இணைந்து இவற்றை பரிசீலித்து ஒப்புதல் வழங்கப்பட உள்ளது.

உங்களுடைய தொகுதி மக்களின் பல்வேறு தேவைகளை அறிந்து அவற்றில் மிக முக்கியமானது என்று சட்டமன்ற உறுப்பினராகிய நீங்கள் கருதும் பத்து முக்கிய திட்டங்கள் குறித்த பட்டியலை அந்தந்த மாவட்ட ஆட்சியர்களிடம் அளிக்கலாம் பட்டியலில் இருக்கக்கூடிய மிக முக்கியமான திட்டங்கள் அடையாளம் காணப்பட்டு தற்போது நடைமுறையில் உள்ள அரசு திட்டங்களின் கீழ் செயல்படுத்த இயலாத திட்டங்களை முன்னுரிமை அடிப்படையில் நிறைவேற்ற நடவடிக்கை எடுக்கப்படும்.

எடுத்துக்காட்டாக உங்கள் தொகுதிக்குட்பட்ட பகுதியில் நெடுங்காலமாக நிறைவேற்றப்படாமல் உள்ள :

குடிநீர் மற்றும் நீர் ஆதாரத்தை மேம்படுத்தக்கூடிய உட்கட்டமைப்பு வசதிகள்

வேளாண் உற்பத்தியை சந்தைப்படுத்துவதற்குரிய பணிகள்

இணைப்பு பாலங்கள் மற்றும் சாலைகள்

மருத்துவ வசதிகள் பள்ளி கலை மற்றும் அறிவியல் கல்லூரி

பாலிடெக்னிக் மற்றும் ஐடிஐ போன்ற புதிய கல்வி நிறுவனங்கள் அல்லது தற்போதுள்ள கல்வி நிறுவனங்களில் தேவைப்படும் உட்கட்டமைப்பு பணிகள் தொழில் வளர்ச்சியை மேம்படுத்தக்கூடிய வசதிகள்

மின் மயானம் நவீன நூலகம் நகர்ப்புறங்களில் ஒருங்கிணைந்த நவீன வசதிகளுடன் கூடிய பேருந்து நிலையங்கள் புதிய சுற்றுலா தளங்கள் மற்றும் சுற்றுலாத்தலங்களை மேம்படுத்தும் பணிகள் போன்ற சமூக பொருளாதார மற்றும் வாழ்வாதாரத்தை மேம்படுத்தக்கூடிய முக்கியத்துவம் வாய்ந்த பணிகளை நீங்கள் பரிந்துரைக்கலாம்.

எனவே தங்களது சட்டமன்ற தொகுதிக்குட்பட்ட ஊரக மற்றும் நகர்ப்புற பகுதிகளில் மக்களின் நீண்ட காலமாக நிறைவேற்றப்படாத 10 முக்கியமான கோரிக்கைகளை தேவை மற்றும் அவசியத்தின் அடிப்படையில் நீங்கள் ஆராய்ந்து அவற்றினை முன்னுரிமைப்படுத்தி அந்தப் பரிந்துரை பட்டியலை தொடர்புடைய மாவட்ட ஆட்சித் தலைவருக்கு அடுத்த 15 தினங்களுக்குள் அனுப்பி வைக்குமாறு உங்களை அன்புடன் இந்த கடிதம் வாயிலாக கேட்டுக்கொள்கிறேன்.

சட்டமன்ற தொகுதியில் பல ஆண்டுகளாக நிறைவேற்றப்படாத மக்களுடைய நீண்ட நாள் தேவைகள் இந்த புதிய முன்னோடி திட்டத்தின் கீழ் உங்கள் மூலமாக நிறைவேறும் என உறுதியாக நான் நம்புகிறேன். இது மட்டுமன்றி மாவட்டங்களிடையே இருக்கக்கூடிய சமூக மற்றும் பொருளாதார ஏற்றத்தாழ்வுகளை சீர் செய்து தமிழ்நாட்டை முதன்மை மாநிலமாக மாற்றுவதற்கும் இத்திட்டம் மிகுந்த பங்களிக்கும் என்பதிலும் எனக்கு நம்பிக்கை உள்ளது. அதற்கான முழு ஒத்துழைப்பையும் நீங்கள் அளிக்க வேண்டும் என நான் அன்புடன் கேட்டுக்கொள்கிறேன். என்று தெரிவிக்கப்பட்டுள்ளது.

Categories

Tech |