கோத்தகிரி அருகே மது போதையில் இருந்த நபர் ஒருவர் அரசு பேருந்தின் கண்ணாடியை உடைத்த சம்பவம் பெரும் பரபரப்பு ஏற்படுத்தி உள்ளது.
நீலகிரி மாவட்டம் கோத்தகிரி பகுதியில் இன்று மதியம் சுமார் 2 மணியளவில் கனமழை கொட்டி தீர்த்தது. எனவே கோத்தகிரியில் இருந்து குன்னூர் மற்றும் ஊட்டி செல்லும் பயணிகள் ஏராளமானோர் பேருந்து வராததால் காத்துக் கொண்டிருந்தனர். அங்கு தனது குடும்பத்துடன் நின்று கொண்டிருந்த ஒருவர் திடீரென அங்கு நிறுத்தி வைக்கப்பட்டிருந்த அரசு பேருந்தின் முன்பாக சென்று கீழே கிடந்த கல்லை எடுத்து பஸ்ஸின் கண்ணாடியை உடைத்தார். பின்னர் தனது கைகளால் மீண்டும் மீண்டும் கண்ணாடியை உடைத்து சேதப்படுத்தினார்.
இந்த செயலை பார்த்த பயணிகள் அனைவரும் அதிர்ச்சி அடைந்தனர். உடனே அருகில் இருந்தவர்கள் காவல்துறைக்கு தகவல் தெரிவித்தனர். பின்னர் அங்கு வந்த காவல்துறையினர் மதுபோதையில் பேருந்தின் கண்ணாடியை உடைத்த நபரை கைது செய்து விசாரணை செய்தனர். அப்போது அவர் தனது குடும்பத்துடன் நீண்ட நேரம் பஸுக்காக காத்திருந்ததாகவும், பஸ்ஸின் டிரைவர் மற்றும் நடத்துனர் நீண்ட நேரம் வராததால் ஆத்திரம் அடைந்து கல்லை எடுத்து அரசு பஸ்ஸின் கண்ணாடியை உடைத்ததாக கூறியுள்ளார். இந்த சம்பவத்தில் பொது சொத்தை சேதப்படுத்திய குற்றத்திற்காக அவர் மீது வழக்கு பதிவு செய்து விசாரணை செய்யப்பட்டது.