பள்ளி நிகழ்ச்சி ஒன்றில் கலந்து கொண்ட அமைச்சர் அன்பில் மகேஷ் பொய்யாமொழி பல முக்கிய விஷயங்களை பகிர்ந்துள்ளார்.
சென்னையை அடுத்த பூந்தமல்லியில் உள்ள வேலப்பன் சாவடியில் செயல்பட்டு வரும் தனியார் பள்ளி ஒன்றில் வளாகத்தில் பிரம்மாண்ட உலக சாதனை நிகழ்விற்கு ஏற்பாடு செய்யப்பட்டிருந்தது. யோகா தினத்தை முன்னிட்டு 415 மாணவர்கள் சமகோண ஆசனத்தில் ஒரு மணி நேரம் அமர்ந்திருக்கும் நிகழ்ச்சி நடைபெற்றது. இந்த நிகழ்ச்சிக்கு பள்ளி கல்வித்துறை அமைச்சர் அன்பில் மகேஷ் பொய்யாமொழி சிறப்பு விருந்தினராக கலந்து கொண்டு கொடியசைத்து வைத்து நிகழ்வை தொடங்கி வைத்தார்.
நிர்ணயித்த நேரத்தை விட 27 நிமிடங்கள் அதிகமாக சமகோண ஆசனம் செய்து ஒரு மணி நேரம் 27 நிமிடங்கள் ஆசனம் செய்து உலக சாதனை மாணவர்கள் படைத்தனர். இது கோல்டன் புக் ஆப் உலக சாதனை புத்தகத்தில் இடம் பிடித்தது. இந்த நிகழ்ச்சியில் பங்கேற்ற மாணவ மாணவியருக்கு பரிசு மற்றும் சான்றிதழ்கள் வழங்கப்பட்டது. இதைத் தொடர்ந்து நிகழ்ச்சியில் பேசிய நீதிபதி சுரேஷ்குமார் தமிழக பள்ளிகளில் யோகா பயிற்சி கொண்டு வர வேண்டுமென்று தமிழக பள்ளிக்கல்வித் துறை அமைச்சரிடம் கேட்டுக்கொண்டார்.
இதற்கு பதில் அளித்து பேசிய அன்பில் மகேஷ் முதல்வரின் கவனத்திற்கு கொண்டு சென்று இது தொடர்பாக விரைவில் நடவடிக்கை எடுக்கப்படும் என்று கூறினார். இது அங்கு கூடியிருந்த மாணவ, மாணவிகளுக்கு மிகுந்த உற்சாகமூட்டும் தகவலாக அமைந்தது. மேலும் பேசிய அமைச்சர், தமிழகத்தில் கொரோனா கட்டுப்பாடுகள் குறித்து முதல்வர் தான் முடிவெடுப்பார். அவர் மூலமாக எங்கள் துறைக்கு வழிகாட்டுதல்கள் அனுப்பப்படும். அதன் அடிப்படையில் அனைத்து மாவட்டங்களுக்கும் தேவையான நடவடிக்கைகள் எடுக்க அறிவுறுத்தப்படும். மாணவர்கள் பாதுகாப்பாக வந்து செல்லும் வகையில் அனைத்து பள்ளிகளிலும் போதுமான நடவடிக்கை எடுக்கப்பட்டுள்ளது என்று தெரிவித்துள்ளார்.