சென்னை பூந்தமல்லி அருகில் உள்ள வேலப்பன் சாவடியில் செயல்பட்டு வரும் தனியார் பள்ளி ஒன்றின் வளாகத்தில் பிரமாண்டமான உலக சாதனை நிகழ்விற்கு ஏற்பாடு செய்யப்பட்டிருந்தது. அதாவது உலக யோகா தினத்தை முன்னிட்டு 415 மாணவர்கள் கடினமான ஆசனத்தில் ஒரு மணி நேரம் அமர்ந்திருக்க நிகழ்ச்சி நடைபெற்றது. அதுமட்டுமில்லாமல் களிமண்ணால் 30 விநாடிகளில் சிலை செய்து உலக சாதனை படைக்கும் பி.கே. முனுசாமி என்பவர் முயற்சியும் அடங்கியது. இந்நிகழ்ச்சியில் பள்ளிக்கல்வித்துறை அமைச்சர் அன்பில் மகேஷ் பொய்யாமொழி, சென்னை உயர்நீதிமன்ற நீதிபதி சுரேஷ்குமார் ஆகியோர் சிறப்பு விருந்தினராக கலந்து கொண்டனர். இவர்கள் கொடியசைத்து தொடங்கி வைத்தனர். அதனைத் தொடர்ந்து மாணவர்கள் நிர்ணயித்த நேரத்தைவிட கூடுதலாக 27 நிமிடங்கள் சமகோண ஆசனம் செய்து ஒரு மணி 27 நிமிடங்கள் ஆசனம் செய்து உலக சாதனை படைத்தனர்.
இந்த சாதனை கோல்டன் புக் ஆப் உலக சாதனை புத்தகத்தில் இடம் பெற்றது. இந்த நிகழ்வில் பங்கேற்ற மாணவ மாணவிகளுக்கு பரிசுகளும் சான்றிதழும் வழங்கப்பட்டது. இந்நிகழ்ச்சியில் பேசிய நீதிபதி சுரேஷ்குமார், தமிழக பள்ளிகளில் யோகா பயிற்சி கொண்டு வர வேண்டும் என்று கேட்டுக் கொண்டு கொண்டார். அதற்கு பதிலளித்து பேசிய அமைச்சர் அன்பில் மகேஷ், இதுகுறித்து முதலமைச்சரின் கவனத்திற்கு கொண்டு சென்று விரைவில் நடவடிக்கை எடுக்கப்படும் என்று தெரிவித்துள்ளார். அதனைத் தொடர்ந்து தமிழகத்தில் கொரோனா கட்டுப்பாட்டுக்குள் குறித்து முதல்வர் தான் முடிவெடுப்பார். அவர் மூலமாக எங்கள் துறைக்கு வழிகாட்டுதல்கள் அனுப்பப்படும்.
அதன்படி அனைத்து மாவட்டங்களுக்கும் தேவையான நடவடிக்கைகள் எடுக்கப்படும். மாணவர்கள் பாதுகாப்பாக வந்து செல்ல அனைத்து பள்ளிகளிலும் போதுமான நடவடிக்கைகள் எடுக்கப்பட்டுள்ளது என்று அவர் தெரிவித்துள்ளார். இதனைத் தொடர்ந்து எதிர்க்கட்சி யார் என்பது தொடர்பாக அதிமுக பாஜக இடையிலான மோதல் போக்கு குறித்து கேட்கப்பட்டது. அதற்கு, தோழமைக் கட்சிகளுக்கு இடையே ஒற்றுமை இல்லை என்பதைத்தான் காட்டுகிறது. தமிழகத்தில் திராவிட கட்சிகள் மட்டும் தான் ஆள முடியும் என்று அதிமுக முன்னாள் அமைச்சர் செங்கோட்டையன் சட்டப்பேரவையில் கூறினார் என்று கல்வி அமைச்சர் தெரிவித்துள்ளார்.