டெல்லியில் நீதிபதியின் மனைவி தூக்கிட்டு தற்கொலை செய்து கொண்ட சம்பவம் பெரும் அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது.
அசோக் பெனிவால் என்பவர் தலைநகர் டெல்லியின் சகரட் பகுதியில் உள்ள கூடுதல் அமர்வு கோர்ட்டில் நீதிபதியாக பணியாற்றி வருகின்றார். இவர் தனது மனைவியுடன் சகர்ட் பகுதியில் வசித்து வந்துள்ளார். இதற்கிடையில் நீதிபதி அசோக்கின் மனைவி நேற்று காலை 11 மணியளவில் மார்க்கெட்டிற்கு செல்வதாக கூறிவிட்டு வீட்டை விட்டு வெளியே சென்றுள்ளார். ஆனால் வெகு நேரமாகியும் அவர் வீடு திரும்பவில்லை. இதனால் சந்தேகமடைந்த நீதிபதி அசோக் தனது மனைவியை காணவில்லை என்று போலீசில் புகார் அளித்துள்ளார்.
அந்த புகாரை தொடர்ந்து வழக்குப்பதிவு செய்த போலீசார் சிசிடிவி கேமராக்களை ஆய்வு செய்தனர். அதில் நீதிபதியின் மனைவி ஒரு ஆட்டோவில் ஏறி சென்றது தெரியவந்துள்ளது. இந்தநிலையில் அந்த ஆட்டோ டிரைவரிடம் போலீசார் நடத்திய விசாரணையில் அந்த பயணியை ராஜ்புர் பகுதியில் இறக்கி விட்டது தெரிய வந்துள்ளது. மேலும் அந்த பகுதியில் தான் அந்தப் பெண்ணின் சகோதரன் வீடு இருக்கிறது என்பதும் விசாரணையில் தெரியவந்தது. இதனை தொடர்ந்து போலீஸ், நீதிபதி அசோக் ராஜ்பூருக்கு சென்று அந்தப் பெண்ணின் சகோதரர் வீட்டிற்கு சென்றனர். வீட்டின் மேல்தளத்தில் பெண்ணின் சகோதரன் குடும்பத்துடன் வசித்து வருகின்ற நிலையில் கீழ்தளத்தில் உள்ள அறைகள் பூட்டப்பட்டிருந்தது.
இதனால் சந்தேகம் அடைந்த போலீசார் பூட்டப்பட்டிருந்த ஒரு அறையின் கதவை உடைத்துக் கொண்டு உள்ளே சென்று பார்த்தனர். அப்போது அங்கு நீதிபதி அசோக்கின் மனைவி தூக்கிட்டு நிலையில் பிணமாக கிடந்ததை கண்டு அதிர்ச்சி அடைந்தனர். இதனையடுத்து உடலை கைப்பற்றிய போலீசார் பிரேத பரிசோதனைக்காக அருகில் உள்ள மருத்துவமனைக்கு அனுப்பி வைத்துள்ளனர். தற்கொலை செய்துகொள்வதற்கு முன் அசோக்கின் மனைவி எழுதி வைத்துள்ள கடிதம் ஒன்றையும் போலீசார் கைப்பற்றி இருக்கின்றனர். இந்த நிலையில் இந்த சம்பவம் பற்றி போலீசார் தீவிர விசாரணை மேற்கொண்டு வருகின்றனர்.