பிரபல தயாரிப்பாளருக்கு நீதிமன்றம் ஒரு லட்ச ரூபாய் அபராதம் விதித்துள்ளது.
பிரபலமான சினிமா தயாரிப்பாளர் ஆஸ்கார் ரவிச்சந்திரன். இவர் இந்தியன் ஓவர்சீஸ் வங்கியிடம் 2 படங்களை தயாரிப்பதற்காக கடன் வாங்கியுள்ளார். இவர் 97 கோடி ரூபாய் கடன் வாங்கியுள்ளார். இந்த படங்களை வங்கிக்கு தகவல் தெரிவிக்காமல் விற்பனை செய்துள்ளார். அதோடு 2 படங்களும் சரியாக ஓடவில்லை. இதனால் ரவிச்சந்திரன் வங்கிக்கு கடனை திரும்ப செலுத்த முடியவில்லை. இதன் காரணமாக வங்கி நிர்வாகம் ரவிச்சந்திரனின் சொத்தை ஏலத்தில் விடுவதற்கு முடிவு செய்தது.
இதை எதிர்த்து ரவிச்சந்திரன் சென்னை உயர்நீதிமன்றத்தில் வழக்கு தொடர்ந்திருந்தார். இந்த வழக்கு நீதிபதிகள் முன்னிலையில் விசாரணைக்கு வந்த போது, வங்கி தரப்பில் ஆஜரான வழக்கறிஞர் ரவிச்சந்திரனுக்கு ஏற்கனவே நிறைய கால அவகாசம் கொடுக்கப்பட்டதாக கூறினார். ஆனால் பலமுறை கால அவகாசம் கொடுத்தும் பணத்தை திரும்ப செலுத்தாத ரவிச்சந்திரன் நீதிமன்றத்தை தவறாக பயன்படுத்துகிறார் என்றார். இதன் காரணமாக நீதிபதிகள் மனுதாரர் ரவிச்சந்திரனுக்கு 1 லட்ச ரூபாய் அபராதம் விதித்து தீர்ப்பு வழங்கினார்கள்.