தமிழக பொதுப்பணித் துறையில் பணி மூப்பு அதிகாரிகளின் பட்டியலை திருத்தி அமைக்க வேண்டும் என்று உயர் நீதிமன்றம் உத்தரவிட்டிருந்தது. அந்த உத்தரவை செயல்படுத்தாமல் இருப்பதாக கூறி தொடரப்பட்ட நீதிமன்ற அவமதிப்பு வழக்கை சுப்ரீம் கோர்ட் புதன்கிழமை அன்று விசாரித்தது. விசாரணையின்போது, வழக்கில் குற்றத்துக்கு தொடர்புடைய உயரதிகாரிகள் எதிர்காலத்தில் நீதிமன்ற உத்தரவுகளை விரைவாக செயல்படுத்த வேண்டும் என்று எச்சரிக்கை விடுத்து வழக்கை முடித்து வைத்தார். ஏற்கனவே தமிழகத்தில் அரசு ஊழியர்களின் பதவி உயர்வில் பணிமூப்பு விவகாரத்தில் சென்னை உயர்நீதிமன்றம் ஒரு உத்தரவை பிறப்பித்திருந்தது.
அந்த உத்தரவை எதிர்த்து உச்சநீதிமன்றத்தில் தமிழக அரசு பணியாளர் தேர்வாணையம் மேல் முறையீடு செய்தது. அந்த வழக்கை விசாரித்த உச்சநீதிமன்றம், கடந்த 2014-ஆம் வருடம் ஜனவரி 16-ஆம் தேதி பிறப்பித்த உத்தரவில் தமிழக அரசின் மேல்முறையீட்டு மனுவை தள்ளுபடி செய்து உத்தரவிட்டது. மேலும் பணிமூப்பு பட்டியல் தேர்வு, தகுதி பட்டியல் அடிப்படையில் தயாரிக்க வேண்டும் என்றும் ரோஸ்டர் பாயிண்ட் அடிப்படையில் இருக்கக்கூடாது என்றும் ஆணையிட்டது. இந்நிலையில் உச்சநீதிமன்ற உத்தரவை மீறுவதாக கூறி உச்ச நீதிமன்றத்தில் தமிழக அரசின் உயர் அதிகாரி விஜயகுமார் ஐ.ஏ.எஸ் உள்ளிட்டோருக்கு எதிராக செந்தூர் உள்ளிட்டோர் தரப்பில் மனு தாக்கல் செய்யப்பட்டது.
அந்த மனுவில் சில உத்தரவுகளை பிறப்பித்திருந்தது. எனினும் அந்த உத்தரவின்படி 3 மாத காலத்தில் திருத்தி அமைக்கப்பட்ட பணி மூப்பு பட்டியலை எதிர்மனுதாரர் தயார் செய்யவில்லை. மேலும் நீதிமன்ற உத்தரவுகளையும் பின்பற்றவில்லை என்று கூறப்படுகிறது. இந்த வழக்கு போனமுறை விசாரணைக்கு வந்தபோது, நீதிமன்றம் பிறப்பித்த உத்தரவில் எதிர் மனுதாரர்கள் இந்த நீதிமன்றத்தின் மூலம் பிறப்பிக்கப்பட்ட உத்தரவை பின்பற்றவும், ரோஸ்டர் பாய்ண்ட் அடிப்படையில் இல்லாமல் டிஎன்பிஎஸ்சி மூலம் தேர்வு அடிப்படையில், பணி மூப்பு நிர்ணயிக்கவும் கடமைப்பட்டவர்கள் ஆகின்றனர்.
இதையடுத்து உள்நோக்கத்துடன் வெளியிடப்பட்ட பணிமூப்பு பட்டியலானது இந்த நீதிமன்றத்தின் உத்தரவுகளை மீறியதாக கருதுகிறோம். அதனால் இந்த உத்தரவில் குறிப்பிட்ட எம். விஜயகுமார், எஸ் தினகரன், டாக்டர் கே. மணிவாசன் உள்ளிட்ட பலர் உச்சநீதிமன்றத்தின் உத்தரவை அவமதித்த குற்றத்துக்கு ஆளாகியுள்ளனர் என்று தெரிவிக்கப்பட்டிருந்தது. மேலும் தேர்வு என்பது ரோஸ்டர் பாயிண்ட் அடிப்படையில் இருக்கக் கூடாது. தகுதியின் அடிப்படையில் தான் இருக்க வேண்டும். இந்த நடவடிக்கையை இந்த உத்தரவு பிறப்பித்த 12 வார காலத்திற்குள் செயல்படுத்த வேண்டும்.
மேலும் நீதிமன்ற அவமதிப்பாக கருதப்படுகின்ற நபர்கள் அடுத்த ஆண்டு ஜனவரியில் விசாரணையின்போது நீதிமன்றத்தில் ஆஜராக வேண்டும் என்றும் நீதிபதிகள் உத்தரவிட்டனர். மேலும் குறிப்பாக மனுதாரர்கள் இதனால் 6 ஆண்டுகள் அலைக்கழிக்க பட்டுள்ளனர். இதனால் உரிய தண்டனை அளிக்கப்படுவது அவசியமாகும். குறிப்பாக அதிகாரிகளுக்கு 1 மாதம் சிறை தண்டனை அளிக்கப்பட வேண்டும் என்று கேட்டுக் கொண்டனர். மேலும் பல தரப்பினர் பல்வேறு குற்றச்சாட்டுகளை முன்வைத்தனர்.
இதையடுத்து எதிர்மனுதாரர்களான குறிப்பிட்ட அதிகாரிகள் தரப்பிலிருந்து வழக்கறிஞர் முகுல் ரோத்தகி, வில்சன், வைத்தியநாதன் உள்ளிட்டோர் ஆஜராகி உச்சநீதிமன்றத்தின் தீர்ப்பை செயல் படுத்துவதில் சம்பந்தப்பட்ட அதிகாரிகள் எந்த அலட்சியமும் காட்டவில்லை. அதிக முக்கியத்துவம் கொடுத்தனர். சம்பந்தப்பட்ட அதிகாரிகளுக்கு உள்நோக்கம் ஏதும் கிடையாது. தனிப்பட்ட முறையில் செயல்படும் நோக்கம் அவர்களுக்கு இல்லை. மேலும் அவர்கள் இந்த விவகாரத்தில் மன்னிப்பும் கேட்டுள்ளனர்.
அதனால் நீதிமன்றம் அவர்களின் எதிர்கால பணியை கருத்தில் கொண்டு அவர்களின் மன்னிப்பை ஏற்று வழக்கை முடித்து வைக்க வேண்டும் என்று கூறியுள்ளார். இதையடுத்து நீதிபதிகள் அமர்வு, நீதி கிடைக்கும் என்ற நம்பிக்கையில் தான் பொதுமக்கள் நீதிமன்றத்தை நாடுகின்றனர். அவர்கள் அலைக்கழிக்க படகூடாது. எனவே எதிர்காலத்தில் நீதிமன்றம் பிறப்பிக்கும் உத்தரவுகள் உடனே செயல்படுத்தப்பட வேண்டும் என்று, சம்பந்தப்பட்ட எதிர் மனுதாரர்களுக்கு எச்சரிக்கை விடுக்கிறோம். மேலும் நீதிமன்ற உத்தரவுகளை விரைவாக செயல்படுத்த வேண்டும் என்று கூறி வழக்கை முடித்து வைத்து நீதிபதிகள் உத்தரவிட்டனர்.