நீதிமன்றத்தில் பணி கேட்டு யாரும் அமைச்சர் ரகுபதி வீட்டிற்கு வர வேண்டாம் என்று போஸ்டர் ஒட்டப்பட்டுள்ளது.
தமிழகத்தில் உள்ள கீழமை நீதிமன்றங்களில் 3557 பணியிடங்கள் இருப்பதாக அறிவிப்பு வெளியானதைத் தொடர்ந்து, காலி பணியிடங்களுக்கான தேர்வு கடந்த மாதம் தமிழகம் முழுவதும் எழுதப்பட்டது. இதற்கிடையில் புதுக்கோட்டையைச் சேர்ந்த மாநில சட்டத்துறை அமைச்சர் ரகுபதியிடம் பரிந்துரை கடிதம் பெறுவதற்கு நேரடியாகவும், கட்சிப் பிரமுகர்கள் வழியாகவும் பலர் முயற்சி செய்து வருகின்றன.
இதை அறிந்த அமைச்சர் ரகுபதி “இது போன்று யாரும் தன்னிடம் பரிந்துரை கடிதம் கேட்டு வரவேண்டாம் என்றும், நீதிபதிகளை உள்ளடக்கிய தேர்வுக் குழுவினரே பணியாளர்களை தேர்வு செய்கின்றனர்” என்று கூறியதாக தெரிகிறது. இதைத்தொடர்ந்து புதுக்கோட்டை கிழக்கு இரண்டாம் வீதியிலுள்ள அமைச்சர் ரகுபதி வீட்டின் முன்பு போஸ்டர் ஒட்டப்பட்டுள்ளது. அதில் ‘உயர்நீதிமன்ற வேலை குறித்து அமைச்சரை சந்திக்க யாரும் அணுக வேண்டாம். அப்பணி முழுமையாக உயர்நீதிமன்ற கட்டுப்பாட்டில் நடைபெறுகிறது’ என்று தெரிவிக்கப்பட்டுள்ளது.