சென்னை சைதாப்பேட்டையில் நீதிமன்ற வளாகத்தில் வைத்து பிரபல ரவுடியை கொலை செய்ய திட்டம் தீட்டிய சம்பவம் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது.
மதுரையைச் சேர்ந்தவர் பாலா. இவர் மீது கொலை, கொள்ளை உள்ளிட்ட 10க்கும் மேற்பட்ட வழக்குள் உள்ளன. இந்நிலையில் கடந்த ஆண்டு மார்ச் மாதம் இவர் மதுரையைச் சேர்ந்த மற்றொரு ரவுடியான சிவக்குமார் என்பவரை கொலை செய்தார். இந்த வழக்கில் முக்கியக் குற்றவாளியான பாலாவை போலீஸார் கைது செய்தனர். இந்நிலையில், விசாரணக்காக நேற்று (செப்.5) சென்னை சைதாபேட்டை நீதிமன்றத்திற்கு போலீஸார் பாலாவை அழைத்து வந்தனர். அப்போது அங்கு முகக்கவசம் அணிந்து சிலர் நின்றிருந்தனர்.
கொரோனா முன்னெச்சரிக்கை நடவடிக்கைகளை இன்னும் ஒருசிலர் கடைப்பிடித்து வருவதால் போலீஸாருக்கு இது குறித்து சந்தேகம் ஏதும் வரவில்லை. இந்நிலையில் தான் முகக்கவசம் அணிந்திருந்த அந்த ஐந்து பேரும் திடீரென பாலாவை நோக்கிப் பாய்ந்தனர். அப்போது சுதாரித்துக் கொண்ட போலீஸார் அந்த மர்ம கும்பலை சுற்றிவளைத்தது. இருப்பினும் 2 பேர் தப்பியோடினர். மூன்று பேரை போலீஸார் கைது செய்தனர். மூன்று பேரை விசாரித்ததில் சிவக்குமாரை கொலை செய்ததற்காகவே பழிவாங்கும் நடவடிக்கையாகவே பாலாவை கொலை செய்ய முற்பட்டதாகத் தெரிவித்தனர். தப்பியோடிய இரண்டு பேரையும் போலீசார் தேடி வருகின்றனர்.