சுகாதார ஆய்வாளர் துப்புரவு பணியாளரை மிரட்டும் வீடியோ சமூக வலைதளங்களில் வேகமாக பரவி வருகிறது.
கோயம்புத்தூர் மாவட்டத்திலுள்ள தெற்கு மண்டலம் 92-வது வார்டில் ஜெயக்குமார் என்பவர் துப்புரவு பணியாளராக பணிபுரிந்து வருகிறார். இவர் தான் பணியாற்றியதற்கான வருகைப்பதிவேடு கடிதம் வேண்டும் என்று கடந்த டிசம்பர் மாதம் சுகாதார ஆய்வாளரான பரம சிவத்திடம் கேட்டுள்ளார். ஆனால் பரமசிவம் கடிதத்தை கொடுக்கவில்லை. இதனால் பா.ஜனதா நிர்வாகியான பழனிச்சாமி என்பவருடன் சென்று ஜெயக்குமார் பரமசிவனிடம் கடிதம் கேட்டுள்ளார். இதனை சிலர் செல்போனில் வீடியோ எடுத்து சமூக வலைத்தளத்தில் வெளியிட்டுள்ளனர். அந்த வீடியோவில் என்னை போல ஒரு பைத்தியத்தை இந்த உலகில் எங்கும் பார்க்க முடியாது எனவும், என்னை பொறுத்தவரை அனைவரும் பைத்தியம் வீடியோ எடுத்துக்கொள் என பரமசிவம் கூறியுள்ளார்.
அதன்பிறகு நீயா? நானா? என்று பார்ப்போம். யாராக இருந்தாலும் தொலைத்துவிடுவேன் என கூறி பரமசிவன் உருட்டுக்கட்டையை எடுத்து மிரட்டும் வகையில் பேசியுள்ளார். மேலும் நான் சாவதாக இருந்தாலும் 10 பேரை கொன்று விட்டு தான் சாவேன் என பரமசிவம் பேசும் காட்சிகள் அந்த வீடியோவில் பதிவாகியுள்ளது. இதுகுறித்து பழனிச்சாமி கோவை மாநகராட்சி ஆணையரிடம் புகார் அளித்துள்ளார். இது குறித்து முழு விசாரணை நடத்தி நடவடிக்கை எடுக்கப்படும் என மாநகராட்சி ஆணையாளர் தெரிவித்துள்ளார்.