குஜராத் மாநிலம் அகமதாபாத்தில் உள்ள சபர்மதி ஆற்றங்கரை மற்றும் கேவடியாவில் உள்ள ஒற்றுமை சிலை ஆகியவை இடையே வரும் சனிக்கிழமை முதல் நாள்தோறும் இரண்டு நீர்வழி விமானங்களை இயக்க போவதாக ஸ்பைஸ்ஜெட் நிறுவனம் தெரிவித்துள்ளது.
விமானம் இயக்கம் தொடர்பாக அந்நிறுவனம் சார்பில் நேற்று வெளியிடப்பட்ட செய்திக் குறிப்பில் அகமதாபாத்தில் உள்ள சபர்மதி ஆற்றங்கரை மற்றும் கேவடியாவில் உள்ள ஒற்றுமை சிலை ஆகியவை இடையே வரும் 31-ம் தேதி முதல் நாள்தோறும் இரண்டு நீர்வழி விமானங்கள் இயக்கப்படும் என்று தெரிவிக்கப்பட்டுள்ளது. ஸ்பைஸ்ஜெட்டின் துணை நிறுவனமான ஸ்பைஸ்ஜெட்டன் மூலம் இந்த விமானங்கள் இயக்கப்படும். பயண நேரம் சுமார் 30 நிமிடங்கள் ஆகும்.
சர்தார் வல்லபாய் பட்டேல் பிறந்த நாளையொட்டி அவருக்கு மரியாதை செலுத்தும் விதமாக இந்த விமானங்கள் நாளை மறுநாள் முதல் இயக்க திட்டமிடப்பட்டுள்ளது. உடான் திட்டத்தின்கீழ் இந்த விமானங்களில் பயணம் செய்வதற்கான குறைந்தபட்ச கட்டணம் 1,500 ரூபாயாகவும் பயண சீட்டுகளை இணையதள முகவரியில் நாளை முதல் பெறலாம் என்று தெரிவிக்கப்பட்டுள்ளது.