சென்னை அடுத்த புழல்கதிர்வேடு பகுதியில் வசித்து வந்தவர் தமிழ்ச்செல்வி (19). இவருக்கும் செங்குன்றத்தை அடுத்த பாடியநல்லூர் ஜோதி நகர் 8வது தெருவை சேர்ந்த மதன் (22) என்பவருக்கும் கடந்த 4 மாதங்களுக்கு முன் காதல் திருமணம் நடைபெற்றது. இந்நிலையில் சென்ற ஜூன் மாதம் 25- ஆம் தேதியில் இருந்து தன் மகளை காணவில்லை என்று தமிழ்ச் செல்வியின் தாயார் காவல் நிலையத்தில் புகார் செய்தார். அத்துடன் தன் மகளை கண்டுபிடித்து தரக்கோரி சென்னை உயர்நீதிமன்றத்தில் ஆட்கொணர்வு மனுவும் தாக்கல் செய்தார்.
இதுகுறித்து காவல்துறையினர் வழக்குப்பதிவு செய்து சந்தேகத்தின்படி கணவன் மதனை பிடித்து விசாரணை மேற்கொண்டனர். அப்போது அவர் காவல்துறையினரிடம் அதிர்ச்சியான தகவல்களை வெளியிட்டார். அதாவது, ஆந்திரமாநிலம் சித்தூர் அருகேயுள்ள கோனே நீர்வீழ்ச்சிக்கு மனைவி தமிழ்ச்செல்வியை அழைத்துச் சென்றேன். அங்கு ஏற்பட்ட தகராறால் தமிழ்ச்செல்வியை கத்தியால் குத்திவிட்டு தான் மட்டும் வந்துவிட்டதாக மதன் தெரிவித்தார்.
அதன்பின் காவல்துறையினர் அங்கு சென்று அங்குள்ள கண்காணிப்பு கேமராக்களை ஆய்வு மேற்கொண்டு சித்தூர் போலீசார் உதவியுடன் தமிழ்ச்செல்வியை தேடும் பணியில் தீவிரமாக ஈடுபட்டனர். இந்நிலையில் கோனே நீர்வீழ்ச்சி அருகேயுள்ள ஒரு புதரில் தமிழ்ச்செல்வியின் உடல் நேற்று கண்டெடுக்கப்பட்டு மீட்கப்பட்டது. இவ்வாறு புதுப் பெண் கொலை செய்யப்பட்டு ஒருமாத காலம் ஆகியதால் அவரது உடல் எலும்புக்கூடாக காட்சியளித்தது. இக்கொலை ஆந்திர மாநிலத்துக்கு உட்பட்ட சித்தூர் பகுதியில் நடைபெற்றது. இதனால் கொலைவழக்காக பதிவு செய்த காவல்துறையினர் காதல் கணவன் மதனை சித்தூர் போலீசாரிடம் ஒப்படைத்தனர். அவர்கள் மதனை கைது செய்து விசாரணை மேற்கொண்டு வருகின்றனர்.