இந்த நீர்கடுப்பு எதனால் வருகிறது.? வராமல் தடுக்க என்னென்ன வழி.? வந்தால் ஒரு ஐந்து நிமிடத்தில் எப்படி குணப்படுத்துவது.? இவற்றைத் தெரிந்து கொள்ளலாம்..!
வெயில் காலம் வந்து விட்டாலே பலருக்கும் வருகிற ஒரு பெரும் அவஸ்தை நீர்கடுப்பு என்று சொல்லப்படுகிறது. நீர்குத்தல் இந்த நீர்க்கடுப்பு ஏற்படும் பொழுது சிறுநீர் போகும் பொழுது சொல்ல முடியாத அளவிற்கு கடுப்புடன் கூடிய வலி ஏற்படும். மேலும் அடிக்கடி சிறுநீர் கழிக்க வேண்டும் என்ற உணர்வு ஏற்படும்.
ஆனால் அப்படி சிறுநீர் கழிக்க முயற்சி செய்யும்பொழுது சொட்டு சொட்டாக மட்டுமே சிறுநீர் வெளியேறும். இதை வெளியே சொல்லவும் முடியாது, மெல்லவும் முடியாது என்கிற அளவிற்கு அப்படி ஒரு அவஸ்தை. லேசாக அடிவயிற்றில் வலியும் ஏற்படும்.
எரிச்சல், வலியோடு துளித்துளியாக சிறுநீர் போகும். இந்த நிலைக்கு கோடையில் தேவையான அளவு தண்ணீர் குடிக்காதது தான் ஒரு முக்கிய காரணம். பொதுவாக நாம் தண்ணீர் அருந்தும் அளவு குறையும்போது சிறுநீரின் அளவும் குறைந்துவிடும். இதனால் சிறுநீரின் மூலம் வெளியேற வேண்டிய உப்புகள் கடினமாகி, சிறுநீர்ப் பாதையில் படிகங்களாக படிந்து விடும்.
இதன் விளைவுதான் நீர்க்கடுப்பாக மாறுகிறது. நிறைய தண்ணீர் குடித்தால் இந்தப் பிரச்சினை சரியாகி விடும். எனவே தினமும் குறைந்தது 3 லிட்டர் தண்ணீராவது கண்டிப்பாக குடிக்க வேண்டும். இன்னும் சொல்லப்போனால் தாகம் அடங்கும்வரை தண்ணீர் குடிக்க வேண்டும். அப்பொழுதுதான் கிருமிகளை அழித்து சென்று வெளியேற்றப்படும்.
அதுமட்டுமல்ல கோடையில் அளவுக்கு மீறி வியர்வை வெளியேறுவதால், உடலில் விரைவில் நீர் இணைப்பு ஏற்படுத்தும். நம் உடலில் போதுமான அளவு திரவம் இல்லையென்றால் சிறுநீர்ப் பாதையில் தொற்று ஏற்படும் வாய்ப்புகள் அதிகம். இதனால் சிறுநீர் போகும்போது எரிச்சல் ஏற்படும். முக்கியமாக கோடைகாலத்தில் மிக அதிக நேரம் வெயிலில் வேலை செய்பவர்கள் சரியான அளவு நீர்ச் சத்து ஆகாரங்களை எடுத்துக்கொள்ளாமல் இருப்பதாலும் சிறுநீர் வெளியேறும் அளவு குறையும்.
இதனால் சிறுநீர் சற்று அடர்த்தி அதிகமாகி, சற்று அடர் மஞ்சள் நிறமாக வெளியேறும் போது எரிச்சல், வலி, கடுப்பு ஏற்படும். குறைந்தது ஒரு நாளைக்கு 4 லிட்டர் தண்ணீராவது குடிக்க வேண்டும். அதே போன்று நீண்ட நேரம் சிறுநீர் கழிக்காமல் அடக்கி வைப்பதன் மூலம் சிறுநீர் கடுப்பு ஏற்படும் வாய்ப்புகள் அதிகம். அதாவது நெடுந்தூரம் பயணம் செல்லும் பொழுது இது போன்ற பிரச்சனைகள் ஏற்பட வாய்ப்புகள் அதிகம்.
இந்த மாதிரியான நேரங்களில் சிறுநீர் பாதையிலுள்ள கிருமிகள் பன்மடங்காகப் பெருக வாய்ப்புள்ளது. அதிலும் ஆண்களை விட பெண்களுக்கு அதிக அளவில் இதுபோன்ற பிரச்சினைகள் ஏற்படுகின்றது.
கோடையில் உடலில் உஷ்ணத்தை அதிகரிக்க கூடியவை, அளவோடு எடுத்து கொள்ளவேண்டும்.
- காரம்,
- புளி
- உப்புச் சுவை
- அசைவ உணவு
- மசாலா உணவுகள்
- டீ
- காபி
- புகைபிடிப்பது
- மது அருந்துதல்
போன்றவற்றை தவிர்ப்பது நல்லது.
நீர்கடுப்பை போக்கும் அருமையான ஒன்பது வீட்டு வைத்தியங்கள்:
1. எலுமிச்சை சாறு:
ஒரு டம்ளர் தண்ணீரில் அரை மூடி எலுமிச்சை பழத்தின் சாறு மற்றும் சிறிதளவு உப்பு இவை இரண்டையும் கலந்து குடித்தால் நீர்க்கடுப்பு நின்று சிறுநீர் தாராளமாகப் பிரியும். இதில் உப்பிற்கு பதிலாக நாட்டுச் சர்க்கரையும் கலந்து சாப்பிடலாம்.
2. வெந்தயம்:
வெந்தயத்தை லேசாக வறுத்து தூள் செய்து வைத்துக்கொள்ள வேண்டும். இதை தினமும் மோரில் கலந்து குடித்து வந்தால், நீர்குத்தல் வராது, வந்தாலும் இதுபோன்று குடித்தால் உடனே நீர்கடுப்பு நின்றுவிடும். பொதுவாக சிறுநீர் பாதையில் நச்சுக்கள் தங்கியிருந்தாலும், சிறுநீர் தொற்று ஏற்படும் வகையில் வெந்தயம் உடனடியாக நச்சுக்களை வெளியேற்றி தொற்றில் இருந்து காப்பாற்றி உடலுக்கு குளிர்ச்சியைக் கொடுக்கக் கூடியது.
3. பானகம்:
இதை இன்றும் கிராமப்புறங்களில் செய்வார்கள். அதாவது ஒரு பெரிய நெல்லிக்காய் அளவு புளியை நன்றாக கரைத்து எடுத்துக் கொள்ள வேண்டும். இதனுடன் வெல்லத்தை சேர்த்து குடித்தால் உடனே நீர்கடுப்பு நின்றுவிடும்.
4. வெட்டிவேர்:
மண்பானையில் சுத்தமான தண்ணீர் ஊற்றி வெட்டிவேரை போட்டு ஊறவைத்து அந்த நீரை அருந்தி வந்தால் நீர்க்கடுப்பு, நீர்குத்தல், எரிச்சல் நீங்கும். உடல் சூடும் தணியும்.
5. மல்லித்தூள்:
ஒரு டம்ளர் தண்ணீருடன் ஒரு டேபிள் ஸ்பூன் மல்லித் தூளை சேர்த்து இரவில் தூங்கும் முன்பு ஊற வைத்துவிட்டு, மறுநாள் காலையில் அதில் நாட்டு சர்க்கரை சேர்த்து குடித்தால் சிறுநீர் பாதையில் உண்டாகும். தொற்றுகள் சரியாகி நீர்கடுப்பு வராது.
6. சீரகம், சோம்பு, வெந்தயம், சின்ன வெங்காயம், கொத்தமல்லி விதை:
இவற்றை சம அளவு எடுத்து அரைத்து அதை மோரில் கலந்து சாப்பிட்டு வந்தால் நீர்க்கடுப்பு உடனே நின்றுவிடும். மோர் ஒரு சிறந்த ப்ரோபயாடிக் உணவு ஆகும். மேலும் இதில் உள்ள பாஸ்பரஸ், கால்சியம் பிரஃபுள் ஏபிக் உடலுக்கு நோய் எதிர்ப்பு சக்தி கொடுத்து சிறுநீர் குழாயில் ஏற்பட்ட தொற்றுகளை அழிக்கக்கூடியது.
7. நன்னாரி வேர், கறிவேப்பிலை, சின்ன வெங்காயம், வெந்தயம், மிளகு, சோம்பு:
ஆகிய அனைத்தையும் ஒன்றாக போட்டு நன்றாக இடித்து, தண்ணீரில் இட்டு நன்கு காய்ச்சி கசாயம் போல் பருகி வந்தால் சிறுநீர் சம்பந்தப்பட்ட அனைத்து கோளாறுகளும் நீங்கும்.
8. சின்ன வெங்காயம்:
ஒரு 3 சின்ன வெங்காயத்தை பொடியாக நறுக்கி, அதை ஒரு டம்ளர் தண்ணீரில் போட்டு கொதிக்க வைத்து அந்தத் தண்ணீரைக் குடித்தால் நீர்க்கடுப்பு உடனே நின்றுவிடும். இல்லை என்றால் மூன்று சின்ன வெங்காயத்தை அப்படியே பச்சையாக சாப்பிட்டாலும் சில நிமிடங்களிலேயே நீர்க்கடுப்பு காணாமல் போய்விடும். அதேபோன்று வெயில் காலத்தில் சிலருக்கு உடம்பில் கட்டிகள் தோன்றும் இதற்கு வெங்காயத்தை நசுக்கி சாறு பிழிந்து கட்டிகள் உள்ள இடங்களில் தடவி வந்தால் நல்ல பலன் கிடைக்கும்.
9.வெண்ணீர்:
ஒரு பாதி அளவு எலுமிச்சை பழ சாற்றுடன் எட்டு மடங்கு வெதுவெதுப்பான வெந்நீர் கலந்து வந்தால் கலந்து குடித்து வந்தால் எரிச்சல், கடுப்பு இல்லாமல் சிறுநீர் வெளியேறும். முக்கியமாக பெண்கள் வெள்ளி கிழமைகளிலும், ஆண்கள் சனிக்கிழமைகளில் எண்ணை தேய்த்து குளித்து வர வேண்டும். நிறைய தண்ணீர் குடிக்கவேண்டும். இளநீர், தர்பூசணி, லெமன் ஜூஸ், நீர்மோர் இவற்றை அடிக்கடி குடித்து வந்தாலும் இதுபோன்ற பிரச்சினைகள் வராமல் தடுக்கலாம்.
முக்கியமாக வெளியிடங்களில் வேலை பார்ப்பவர்கள் நீண்ட நேரம் பயணம் மேற்கொள்பவர்கள் சிறுநீர் கழிக்க வேண்டும் என்கிற உணர்வு வந்துவிட்டால், உடனடியாகச் சிறுநீர் கழித்துவிட வேண்டும். மேலும் மிகவும் இனிப்பான காரமான உணவுகளை முடிந்தவரை தவிர்ப்பது நல்லது.
பொதுவாக இங்கே சொன்னவற்றில் அனைவரும் கடைபிடித்தால் சிறுநீர் சம்பந்தமான எந்த பிரச்சனையும் வரவே வராது கோடையில் நிம்மதியாக இருக்கலாம்