மகள்களை கட்டையால் அடித்து கொன்ற நபரை காவல்துறையினர் தீவிரமாக தேடி வருகின்றனர்
காஞ்சிபுரம் மாவட்டத்தில் உள்ள சின்ன மதுரபாக்கம் பகுதியில் கோவிந்தராஜன்-கீதா தம்பதியினர் வசித்து வருகின்றனர். இவர்களுக்கு நதியா, தீபா என்ற இரு மகள்கள் இருந்துள்ளனர். இந்நிலையில் கோவிந்தராஜன் தினமும் மது குடித்து விட்டு வீட்டிற்கு வந்து தனது மனைவியிடம் தகராறு செய்துள்ளார். அதைப்போல் நேற்று முன்தினமும் கோவிந்தராஜன் மது குடித்துவிட்டு வந்து வீட்டில் தகராறு செய்துள்ளார். இதனை பார்த்த நந்தினி, தீபா 2 பேரும் “எப்போதும் நீ மது குடித்துவிட்டு வந்து தகராறு செய்கிறாய். ஆனால் அம்மா வேலைக்கு சென்று கஷ்டப்படுகிறார் என தனது தந்தையை கண்டித்துள்ளனர்.
இதனால் ஆத்திரம் அடைந்த கோவிந்தராஜன் கட்டையால் தீபா மற்றும் நந்தினி ஆகிய 2 பேரையும் சரமாரியாக தாக்கியுள்ளார். இதில் படுகாயம் அடைந்த தீபா சம்பவ இடத்திலேயே பரிதாபமாக உயிரிழந்து விட்டார். மேலும் காயம் அடைந்த நந்தினியை அருகில் இருந்தவர்கள் மீட்டு சிகிச்சைக்காக அரசு மருத்துவமனைக்கு கொண்டு சென்றனர். ஆனால் அங்கு நந்தினியை பரிசோதித்த மருத்துவர் அவர் ஏற்கனவே இறந்துவிட்டதாக தெரிவித்துள்ளார். இதுகுறித்து வழக்குப்பதிவு செய்த காவல்துறையினர் தனது சொந்த மகள்களை அடித்து கொன்ற கோவிந்தராஜனை தீவிரமாக தேடி வருகின்றனர். இந்த சம்பவம் அப்பகுதி மக்களிடையே சோகத்தை ஏற்படுத்தியுள்ளது.