ஜார்கண்ட் மாநிலத்தில் உத்தம் மைத்தி(27) மற்றும் அஞ்சனா மஹாடே (26) தம்பதியினர் வசித்து வருகின்றனர். இவர்களுக்கு நான்கு வயதில் மகள் ஒருவர் உள்ளார். அந்தப் பெண் குழந்தையை அருகில் உள்ள ஆரம்ப பள்ளிக்கூடத்தில் பெற்றோர் சேர்த்துள்ளனர். ஆனால் குழந்தை சரியாக படிக்காமல் விளையாடுவதாக பெற்றோர் கருதியுள்ளனர். இதை எடுத்து சரியாக பாடம் படிக்கும்படி பெற்றோர் கூறியும் குழந்தை படிக்காததால் ஆத்திரமடைந்த அவர்கள் குழந்தையின் கைகளை கட்டி கடுமையாக தாக்கியுள்ளனர்.
அதனால் குழந்தை மயக்கம் அடைந்தது. உடனே மருத்துவமனைக்கு குழந்தையை கொண்டு சென்றனர். ஆனால் மருத்துவமனைக்கு செல்லும் வழியிலேயே குழந்தை உயிரிழந்து விட்டது. இதனால் அதிர்ச்சி அடைந்த பெற்றோர் உயிரிழந்த குழந்தையை அருகில் உள்ள பகுதிக்கு எடுத்துச் சென்று ரயில் நிலையம் அருகே இருந்த முப்புதருக்குள் வீசிவிட்டு வீட்டிற்கு சென்றுள்ளனர். வீட்டிற்கு வந்த தம்பதியிடம் குழந்தை எங்கே என்று அக்கம் பக்கத்தினர் கேட்டுள்ளனர். அதற்கு முன்னுக்குப் பின் முரணாக அவர்கள் பதில் அளித்தனர்.
இதனால் சந்தேகம் அடைந்த அக்கம் பக்கத்தினர் உடனே இது குறித்து போலீசில் புகார் அளித்தனர். புகாரின் அடிப்படையில் போலீசார் நடத்திய விசாரணையில்,சரியாக படிக்காததால் தங்கள் நான்கு வயது மகளை கடுமையாக தாக்கியதும் அதில் குழந்தை உயிரிழந்ததை இருவரும் ஒப்புக்கொண்டனர். இதையடுத்து கணவன் மனைவி இருவரையும் போலீசார் கைது செய்து விசாரணை நடத்தி வருகிறார்கள்.