வாலிபர் மீது திரவியம் வீசிய பெண்ணை போலீசார் கைது செய்துள்ளனர்.
அரியானா மாநிலத்தில் உள்ள பஹதுர்கர் பகுதியில் ஷியாம் சிங் என்பவர் வசித்து வருகிறார். இவர் தனது அத்தை வீட்டில் வசித்து வருகிறார். இந்நிலையில் இவருக்கும் கோஹானா கிராமத்தை சேர்ந்த அஞ்சலி என்ற பெண்ணுக்கும் பழக்கம் ஏற்பட்டுள்ளது. இதனையடுத்து அஞ்சலி தினமும் ஷியாமை போனில் தொடர்பு கொண்டு பேசி வந்துள்ளார். இந்நிலையில் திடீரென ஒரு நாள் அந்த பெண் தனது பெற்றோருடன் ஷியாமின் அத்தை வீட்டிற்கு சென்று தன்னை திருமணம் செய்து கொள்ளுமாறு கூறியுள்ளார். இதனை கேட்ட அவர்கள் சிறிது அவகாசம் கேட்டுள்ளனர்.
இந்த நிலையில் அந்த பெண்ணுக்கு ஏற்கனவே திருமணம் ஆகி இருப்பதும், தனது கணவரை பிரிந்து வாழ்வதும் தெரிய வந்தது. இதனையடுத்து ஷியாமும் அவரது அத்தையும் திருமணத்திற்கு மறுத்து விட்டனர். இதனால் ஆத்திரமடைந்த அந்த பெண் அந்த இளைஞரை தொலைபேசியில் தொடர்பு கொண்டு துன்புறுத்தியுள்ளார். இந்நிலையில் நீ எனக்கு கிடைக்கவில்லை என்றால் வேறு யாருக்கும் கிடைக்க விட மாட்டேன் என கூறி மிரட்டியுள்ளார். இதனையடுத்து ஷியாம் அந்த பெண்ணிடம் பேசுவதை நிறுத்தினார்.
இதனால் கோபம் அடைந்த அந்த பெண் அவரது வீட்டின் அருகே கடந்த 26-ஆம் தேதி மறைந்து இருந்துள்ளார். இந்நிலையில் வீட்டை விட்டு வெளியே வந்த ஷியாம் மீது திடீரென்று அந்தப் பெண் தான் வைத்திருந்த 5 லிட்டர் ஆசிட்டை எடுத்து வீசியுள்ளார். இதில் ஷியாமின் கை, கால், வாய், கழுத்து, இடுப்பு ஆகிய பகுதிகள் எரிந்து கீழே விழுந்துள்ளது. இதனையடுத்து வலியில் துடித்து அவரை அருகில் இருந்தவர்கள் மீட்டு மருத்துவமனையில் அனுமதித்தனர். அங்கு அவருக்கு தீவிர சிகிச்சை அளிக்கப்பட்டு வருகிறது. இதுகுறித்து வழக்கு பதிவு செய்த போலீசார் தீவிர விசாரணை மேற்கொண்டு வருகின்றனர். மேலும் இது குறித்து டிஎஸ்பி சிட்டி வீரேந்திர ராவ் கூறியதாவது. எங்களுக்கு ஆசிட் வீசியதாக புகார் வந்தது. ஆனால் எங்களால் அந்த வாலிபரின் வாக்குமூலத்தை பதிவு செய்ய முடியவில்லை. மேலும் அவரின் அத்தை வாக்கு மூலத்தின் மூலம் வழக்கு பதிவு செய்து நடவடிக்கை எடுக்கப்பட்டு வருகிறது என கூறியுள்ளார்.