நூதன முறையில் திருடப்பட்ட பணத்தை போலீசார் மீண்டும் பாதிக்கப்பட்டவரின் வங்கி கணக்கில் செலுத்தினர்.
சென்னை மாவட்டத்தில் உள்ள முகப்பேரில் ரோமி பைநாடன்(52) என்பவர் வசித்து வருகிறார். இவர் திருமங்கலம் காவல் நிலையத்தில் ஒரு புகார் அளித்துள்ளார். அந்த புகாரில் கூறியிருப்பதாவது, நீங்கள் மின்சார கட்டணம் செலுத்தவில்லை என எனது செல்போனுக்கு ஒரு குறுஞ்செய்தி வந்தது. மின் இணைப்பை துண்டிக்காமல் இருக்க வேண்டும் என்றால் செல்போனில் தொடர்பு கொள்ளவும் என அதில் ஒரு எண்ணும் இருந்தது. பின்னர் அந்த செல்போன் எண்ணில் தொடர்பு கொண்ட போது ஒருவர் தன்னை மின்வாரிய அதிகாரி என்று அறிமுகப்படுத்தி கொண்டார்.
இதனை அடுத்து ஒரு செயலியை பதிவிறக்கம் செய்யும்படி அவர் கூறினார். அதன்படி அந்த செயலியை பதிவிறக்கம் செய்தேன். உடனடியாக மூன்று தவணையாக எனது வங்கிக் கணக்கில் இருந்து 8 லட்சத்தி 88 ஆயிரம் ரூபாய் எடுக்கப்பட்டதாக குறுஞ்செய்தி வந்தது. எனவே மோசடியில் ஈடுபட்ட அந்த நபர் மீது நடவடிக்கை எடுக்க வேண்டும் என அவர் புகார் அளித்தார். இது குறித்து வழக்கு பதிவு செய்த அண்ணாநகர் சைபர் கிரைம் போலீசார் வங்கி நிர்வாகத்திடம் அந்த பணத்தை மர்ம நபர்களின் வங்கி கணக்குக்கு பரிமாற்றம் செய்யாமல் நிறுத்தி வைக்குமாறு தெரிவித்துள்ளனர்.
மேலும் போலீசார் தொடர்ந்து கண்காணித்து வங்கிக்கு நினைவூட்டல் கடிதங்கள் மற்றும் நோட்டீஸ்களை வழங்கி உள்ளனர். அதன்படி வங்கி நிர்வாகத்தினர் புகார் தாரரின் 8,88,000 ரூபாய் பணத்தை திரும்ப பெற்று அவரது வங்கி கணக்கில் மீண்டும் வரவு வைத்துள்ளனர். இந்நிலையில் இது போன்று மோசடி சம்பவங்கள் நடைபெற்றால் அருகில் இருக்கும் காவல் நிலையத்தில் புகார் அளிக்க வேண்டும் அல்லது கட்டணமில்லா தொலைபேசி எண் 1930 மூலம் புகார் தெரிவிக்க வேண்டும் என போலீஸ் கமிஷனர் சங்கர் ஜிவால் தெரிவித்துள்ளார்.