நூலை வாங்கிக்கொண்டு ரூ 8 3/4 லட்சம் மோசடி செய்த வழக்கில் ஐந்து வருடங்களாக தலைமறைவாக இருந்த தொழில் அதிபரை காவல்துறையினர் கைது செய்துள்ளனர்.
விருதுநகர் மாவட்டம், ராஜபாளையம் அருகில் சோழபுரம் பகுதியில் வசித்து வருபவர் அழகப்பன். இவர் ஸ்பின்னிங் மில் மேலாளர். ஈரோடு மாவட்டம் பவானியில் வசித்த குழந்தைவேல் என்ற பழனியப்பன்(51). இவர் சென்னிமலையில் டெக்ஸ்டைல் நடத்தி வருகிறார். இவர் கடந்த 2010ஆம் வருடம் ஆகஸ்ட் மாதம் 7-ம் தேதி ரூ 8,88,000-க்கு நூலை அழகப்பனிடம் இருந்து வாங்கியுள்ளார்.குழந்தைவேல் நூலை பெற்றுக் கொண்டு ரூ 8,88,000-க்கு காசோலையை அழகப்பனிடம் கொடுத்துள்ளார். ஆனால் வங்கியில் பணம் இல்லை என்பதால் காசோலை திருப்பி வந்தது.
இதனையடுத்து ஸ்பின்னிங் மில் நிர்வாகத்தினர் குழந்தைவேல் என்ற பழனியப்பனை தொடர்பு கொள்ள முயற்சி செய்தபோது அவருடைய செல்போன் சுவிட்ச் ஆப் செய்யப்பட்டுருந்தது. மேலும் அவர் தலைமறைவாகி இருந்தார். இதுகுறித்து ஸ்பின்னிங் மில் மேலாளர் ஈரோடு மாவட்ட குற்றப்பிரிவு காவல் நிலையத்தில் புகார் கொடுத்துள்ளார். அந்தப் புகாரில் குழந்தைவேல் என்ற பழனிசாமி என்னிடம் நூலை வாங்கி திட்டமிட்டு பணமில்லாத காசோலை கொடுத்து ஏமாற்றி விட்டார். மேலும் அவருக்கு உடந்தையாக வெங்கடபதி, சாகுல் அமீது ஆகியோர் செயல்பட்டார்கள். இவர்கள் 2 பேர் மீதும் நடவடிக்கை எடுக்க வேண்டுமென்று கூறியிருந்தார்.
அதன் அடிப்படையில் மாவட்ட குற்றப்பிரிவு காவல்துறையினர் வழக்குப் பதிந்து 3 பேரையும் கைது செய்து சிறையில் அடைத்துள்ளனர். அதன்பின் ஜாமினில் வெளியே வந்த அவர்கள் தலைமறைவு ஆகினார்கள். அந்த மூன்று பேரையும் கைது செய்து நீதிமன்றத்தில் ஆஜர்படுத்த கடந்த 2014-ஆம் வருடம் மார்ச் மாதம் 13ஆம் தேதி ஈரோடு தலைமை குற்றவியல் நீதித்துறை நடுவர் பிடிவாரண்ட் உத்தரவு பிறப்பித்துள்ளார்.
இந்த உத்தரவின்பேரில் ஈரோடு மாவட்ட குற்றப்பிரிவு காவல்துறையினர் 3 பேரையும் தேடி வந்துள்ள நிலையில், ஐந்து வருடங்களாக தலைமறைவாக இருந்த குழந்தைவேல் என்ற பழனியப்பனை காவல்துறையினர் கைது செய்து நீதிமன்றத்தில் ஆஜர்படுத்தி சிறையில் அடைத்துள்ளனர். மேலும் தலைமறைவாக இருக்கின்ற 2 பேரை காவல்துறையினர் வலைவீசி தேடி வருகின்றனர். இதே போன்று மோசடி வழக்கு ஒன்றில் விருதுநகர் மாவட்டம், பந்தல்குடி காவல்துறையினர் குழந்தைவேல் என்ற பழனியப்பனை ஏழு வருடங்களாக தேடி வந்தது தெரியவந்துள்ளது.