நூல் விலை உயர்வு காரணமாக முழு வேலை நிறுத்தப்போராட்டத்தில் ஈடுபட உள்ளதாக ஜவுளி உற்பத்தியாளர்கள் அறிவித்துள்ளன.
திருப்பூர் மற்றும் கோவை ஆகிய இரண்டு மாவட்டங்களிலும் இரண்டு லட்சம் விசைத்தறிகள் செயல்பட்டு வருகிறது. இந்த விசைத்தறி மூலமாக ஜவுளி உற்பத்தியாளர்கள் நூல் கொடுத்து அதை துணியை மாற்றி விற்பனை செய்து வருவார்கள். இந்த நிலையில் நூல் விலை ஏற்றத்தை கட்டுக்குள் கொண்டுவர வலியுறுத்தி கோவை, திருப்பூர் மாவட்டங்களை சேர்ந்த ஜவுளி உற்பத்தியாளர்கள் வரும் 22ஆம் தேதி முதல் அடுத்த மாதம் 5ஆம் தேதி வரை 15 நாட்களுக்கு முழுமையாக வேலை நிறுத்தப்போராட்டத்தில் ஈடுபட உள்ளதாக அறிவித்துள்ளனர். இந்த வேலைநிறுத்தம் காரணமாக திருப்பூர் மற்றும் கோவை மாவட்டங்களில் 1.5 லட்சம் முதல் இரண்டு லட்சம் விசைத்தறிகள் இயங்காத சூழ்நிலை உருவாகும்.
நூல் விலை ஏற்றத்தை கண்டித்து ஜவுளி உற்பத்தியாளர்கள் ஏற்கனவே 50 சதவீத உற்பத்தி நிறுத்தம், நூல் கொள்முதல் நிறுத்தம், முழுமையான வேலை நிறுத்தப் போராட்டங்கள் செய்து வரும் நிலையில் தற்போது மேலும் 15 நாட்கள் வேலை நிறுத்தம் செய்யப்படுவதாக உற்பத்தியாளர்கள் பொதுக்குழுவில் முடிவு எடுக்கப்பட்டுள்ளது. இதன் காரணமாக கோவை, திருப்பூர் ஆகிய இரண்டு மாவட்டங்களிலும் சேர்த்து ரூபாய் 100 கோடிக்கு ஜவுளி உற்பத்தி வர்த்தகம் பாதிக்கப்படும்.
ஜவுளி உற்பத்தியாளர்கள் வேலை நிறுத்தத்தில் ஈடுபடுவதால் விசைத்தறிகளில் பணியாற்றும் லட்சக்கணக்கான கூலி தொழிலாளர்கள் நேரடியாக பாதிக்கப்படுவார்கள். பஞ்சு மற்றும் நூல் ஏற்றுமதிக்கு தடை விதித்து நூல் விலையை கட்டுக்குள் கொண்டு வர நடவடிக்கை மேற்கொள்ள வேண்டும் என்று மத்திய அரசுக்கு ஜவுளி உற்பத்தியாளர்கள் கோரிக்கை விடுத்துள்ளனர்.