Categories
தேசிய செய்திகள்

நெகிழியை 100 % ஒழிக்கும் நோக்கில் களத்தில் ஒரு இளைஞர் !

நாடே நெகிழி பயன்பாட்டைக் குறைக்கும் முயற்சியில் தீவிரமாக இறங்கியுள்ள சூழலில் நெகிழியை 100 % விழுக்காட்டளவில் முற்றிலுமாக ஒழிக்கும் நோக்கில் ஒரு இளைஞர் களமிறங்கி சாதித்துக் காட்டியுள்ளார்.

மக்கள் மத்தியில் கண்ணுக்கு தெரிந்தும் குறைக்க முடியாத அளவுக்கு இழையோடி இருக்கும் பிளாஸ்டிக் பயன்பாட்டை குறைக்க தனி ஒரு மனிதனாக அவ்விளைஞர் எதிர்கொண்ட அனைத்து இடர்களுக்கும் சேர்த்தே இறுதி வெற்றியை அடைந்துள்ளார். நெகிழியால் தயாரிக்கப்படாத (பிளாஸ்டிக் அல்லாத) யுபிஐ அடிப்படையிலான கிரெடிட் கார்டுகள், அவரது கடின உழைப்பின் விளைவாய் உருவாக்கம் பெற்றுள்ளன.

உலகளவில் சிந்தித்து உள்ளூர் அளவில் செயல்பட தொடங்கு என்ற புதுமொழிக்கேற்ப முதலில் ஹைதராபாத்திலும் பின்னர் இந்தியா முழுவதும் பிளாஸ்டிக் பயன்பாட்டைக் குறைப்பதற்கான வழியை உருவாக்குவதே அவரது குறிக்கோள் என்கிறார்.

பெரும்பணியை தனி ஆளாக சுமந்த விஷால் ரஞ்சனுக்கும் அவரது முன்முயற்சிக்கும், வங்கிகளிடமிருந்தோ அல்லது மக்களிடமிருந்தோ எந்தவிதமான பாராட்டும் ஆதரவும் கிடைக்கவில்லை. ஆனால், சுமார் இரண்டாண்டு தொடர் முயற்சிகளுக்குப் பிறகு, யுபிஐ அடிப்படையிலான கிரெடிட் கார்டை ‘வி கார்ட்’ என்ற பெயரில் உருவாக்குவதில் அவர் வெற்றி பெற்றார்.

வி – கார்ட் அட்டைகள், ஸ்மார்ட் போன்கள் வழியாக இயங்குகிறது – அதன் செயல்முறை மற்ற கிரெடிட் கார்டுகளைப் போன்றது தான், ஒரே வித்தியாசம் இது பிளாஸ்டிக்கில் தயாரிக்கப்பட்ட அட்டை அல்ல. வழக்கமாக வங்கிகள் மக்களுக்கு குறைந்தபட்ச கணக்கு இருப்பு & குறிப்பிட்ட எண்ணிக்கையிலான பரிவர்த்தனைகளுக்கு கடன் அட்டைகளை வழங்குகின்றன. ஆனால் வி – கார்ட் ஒரு சிறிய கணக்கு இருப்புடன் அதே வசதிகளைப் பயன்படுத்த மக்களை அனுமதிக்கிறது.

”வி – கார்ட்” தேசியக் கொடுப்பனவு கழகத்தால் நடத்தப்படும் ’ஒருங்கிணைந்த கட்டண இடைமுக’த்தின் உதவியுடன் செயல்படுகிறது. அதற்கான அனுமதிகள் இந்திய ரிசர்வ் வங்கியிடமிருந்து முறையான வழியில் பெறப்பட்டுள்ளன.

”வி – கார்ட்” அட்டை இரண்டு லட்சம் ரூபாய் வரம்பைக் கொண்டது. வி-கார்டு கைப்பேசி செயலி வழியாக இயங்கிறது. சாதாரண அட்டையைப் போலவே, கடனாகப் பெறப்பட்ட தொகை பரிமாற்றத்தின் 30 நாட்களுக்குள் டெபாசிட் செய்யப்பட வேண்டும். உண்மையில், ”வி – கார்ட்” தவணை அல்லது EMI களின் வடிவத்தில் பரிவர்த்தனைகளை எளிதாக்குகிறது.

கொல்கத்தாவைச் சேர்ந்த எம்பிஏ பட்டதாரியான விஷால், இந்த நிலையை அடைய இரண்டாண்டுகள் கடுமையாக உழைத்திருக்கிறார். முன்னதாக, நாடு முழுவதும் 100க்கும் மேற்பட்ட மருத்துவமனைகளுக்கு தொழில்நுட்ப உதவிகளை வழங்கியுள்ள அவர் பல நிறுவனங்களுக்கு ஆலோசகராகவும் பணியாற்றியுள்ளார்.

மற்ற நாடுகளை விட இந்தியாவில் குறைந்த அளவிலான பிளாஸ்டிக் அடிப்படையிலான பரிவர்த்தனை அட்டைகள் பயன்பாட்டில் இருப்பதை உணர்ந்த அவர் , எண்ணிக்கை அதிகமாவதற்கு முன்பு இந்த பணியில் இறங்க வேண்டும் என்ற உத்வேகத்தில் இதனை தொடங்கி இருக்கிறார்.

இப்போது போலவே ”வி – கார்ட்” டின் செயல்திறம் நிரூபிக்கப்பட்டால், அரசாங்கம் அதன் பயன்பாட்டை அதிகரிக்கக்கூடும், இதனால் தற்போதுள்ள முறைகள் காலாவதியாகும் வாய்ப்பும் இருக்கிறது. விஷால் தற்போது வி-கார்ட்டினை மேம்படுத்தும் செயல்களில் இறங்கியுள்ளார். இந்தியா முழுவதும் 47 நகரங்களுக்கு இந்த சேவையை வழங்கி வருகிறார், மேலும் பல நகரங்களிலும் இதை தொடங்கவும் திட்டமிட்டுள்ளார்.

Categories

Tech |