நெஞ்சு சளியால் பலரும் அவதிப்பட்டு வருகிறார்கள் அவர்களுக்காக சில குறிப்புகள். நாம் உண்ணும் உணவின் மூலமே இதற்கு முடிவு கட்டிவிடலாம்.
சளி, இருமல், ஜலதோஷம் இது மூன்றும் வந்தால் வாழ்க்கையை வெறுத்து விடும். சில நேரம் நெஞ்சில் சளி கட்டிக்கொண்டு அது மிகப் பெரும் அவஸ்தை. இது மாதிரியானவர்களுக்கு நாம் அன்றாடம் பயன்படுத்தும் மிக எளிய பொருட்களை கொண்டு ரசம், சூப் மற்றும் குழம்பு என உணவு மூலமாகவே தீர்வு காண முடியும்.
ஆடாதொடை இலையை சிறு துண்டாக நறுக்கி இட்லி பானையில் வைத்து புட்டு அவிப்பது போல் அவித்து சூடாக இருக்கும் போதே சாறு எடுக்க வேண்டும். 50 மில்லி சாறு எடுத்தவுடன் அதில் 15 மில்லி தேன் கலந்து ஒரு வேளைக்கு 10 மில்லி வீதம் தினமும் நான்கு முதல் ஆறு வேளை குடிக்கலாம். இது நெஞ்சு சளிக்கு மட்டுமல்ல சளியுடன் ரத்தம் வருவதையும் சரி செய்யும்.
நெஞ்சு சளி கட்டி இருக்கும்போது பூண்டு குழம்பு சாப்பிடுவது நல்லது. சின்ன வெங்காயம், வெள்ளைப்பூண்டு, மிளகு, சீரகம், மல்லித்தழை, தேங்காய் சேர்த்து செய்யப்படும் பூண்டு குழம்பு மற்றும் பூண்டு ரசம் சளியை அகற்றும். மேலும் நுரையீரல் குழாய்களில் சைனஸ் குழிகளில் படிந்திருக்கும் கெட்டியான சளியை இளக்கி வெளியேற்றும்.
மழை மற்றும் பனிக்காலங்களில் நெஞ்சு சளி படுத்தி எடுக்கும். அதற்கு கண்டங்கத்தரிக்காய் நெஞ்சு சளியை அகற்றும். வழக்கமாக நாம் பயன்படுத்தும் கத்தரிக்காயை போல இதையும் சமைத்து சாப்பிடலாம். இது நெஞ்சில் கட்டியிருக்கும் சளியை அகற்றி விடும்.
நெஞ்சு சளிக்கு மிகவும் எளிமையான கசாயம் ஒன்று உள்ளது. சுக்கு, மிளகு, தனியா, திப்பிலி, சித்தரத்தை போன்றவற்றை சம அளவு எடுத்து இடித்து கசாயமாக்கி குடித்து வந்தால் கடுமையான நெஞ்சுவலி மூன்றே நாளில் விலகும்.
சிலசமயம் சளியுடன் இருமலும் சேர்ந்து தொல்லைப்படுத்தும் அதற்கு இஞ்சி சாற்றுடன், எலுமிச்சை சாறு, தேன் சம அளவு சேர்த்து குடித்தால் இருமல் நின்றுவிடும். குழந்தைகள் முதல் பெரியவர்கள் வரை இதை குடிக்கலாம்.
அதேபோல இஞ்சியுடன் சிறிது மிளகுத்தூள் சேர்த்து நீர்விட்டு காய்ச்ச வேண்டும் மிதமான தீயில் 5 முதல் 7 நிமிடங்கள் வரை வைத்திருக்க வேண்டும். இந்த கஷாயத்தை வடிகட்டி தேன் சேர்த்து குடித்தால் சளி அகலும், நெஞ்சுச் சளி கட்டிருந்தாலோ, தொண்டைக்கட்டு, நாக்கு வறட்சி இன்மை, குரல் கம்மல் என பல பிரச்னைகள் வரிசை கட்டும்.
அதுபோன்ற நேரங்களில் திப்பிலியை நெய்யில் வறுத்து பொடியாக்கி தேனுடன் கலந்து காலை, மாலை வேளைகளில் சாப்பிடலாம். இஞ்சி, மிளகு சேர்த்து வெந்நீர் போட்டு காய்ச்சிக் குடித்தால் சளி விலகும். ஒரு கரண்டியில் எண்ணெய் ஊற்றி சூடு படுத்தி நெஞ்சு விலா, முதுகு பகுதியில் தேய்த்து விட வேண்டும். அதன்பிறகு எண்ணை தடவிய இடத்தில் கோதுமை தவிடு அல்லது கோதுமை மாவை வறுத்து துணியில் கட்டி ஒத்தடம் கொடுத்தாலும் நெஞ்சு சளி இளகி நீங்கிவிடும்.
இம்முறைகளை பின்பற்றி தீராத நெஞ்சு சளியையும் விரட்டி அடியுங்கள்..