மதுரையில் கடன் தொல்லை காரணமாக வளர்ப்பு நாயை கொன்று விட்டு இரண்டு மகள்கள் மற்றும் தாய் தூக்கிட்டு தற்கொலை செய்து கொண்ட சம்பவம் சோகத்தை ஏற்படுத்தியுள்ளது.
மதுரையில் ஒத்தக்கடை போலீஸ் நிலையம் அருகே உள்ள மலைச்சாமி புறத்தில் அருண் மற்றும் வளர்மதி தம்பதியினர் வசித்து வந்தனர். அவர்களுக்கு 19 வயதில் அகிலா என்ற மகளும், 17 வயதில் ப்ரீத்தி என்ற மகளும் உள்ளனர். அவர்கள் வாடகை வீட்டில் வசித்து வருகிறார்கள். இந்நிலையில் கடந்த 4 மாதங்களுக்கு முன்னர் அருணுக்கு திடீரென காய்ச்சல் ஏற்பட்டு சிகிச்சை பலனின்றி பரிதாபமாக உயிரிழந்தார். கணவர் திடீரென உயிர் இழந்ததால் வளர்மதி தனது இரண்டு மகள்களையும் வளர்க்க முடியாமல் அன்றாட செலவுக்கு திண்டாடும் நிலைக்கு தள்ளப்பட்டார்.
அதனால் பலரிடம் கடன் வாங்கி குடும்பத்தை நடத்தி வந்துள்ளார். அவர் நாளுக்கு நாள் அதிகமாக கடன் வாங்கியதால், வாங்கிய கடனை திருப்பித் தர முடியவில்லை. அதனால் அவர் வாழ்க்கையை வெறுத்துப் போனார். இனிமேல் கடன் வாங்காமல் வாழ்வது என்றால் உயிரை விடுவது தான் சிறந்தது என்று வளர்மதி முடிவு செய்தார். இதுபற்றி தனது மகளிடம் தெரிவித்தார். குடும்பத்தின் சூழ்நிலையை நினைத்து மகள்கள் இரண்டு பேரும் தாயின் முடிவுக்கு ஒப்புக் கொண்டனர்.
அதன் பிறகு நேற்று மூன்று பேரும் வீட்டின் பூஜை அறையில் விளக்கு ஏற்றி வழிபட்டு விட்டு, தனியாக ஒரு அறைக்கு சென்று தனித்தனியாக தூக்குப்போட்டு தற்கொலை செய்து கொண்டனர். அவர்கள் வீட்டில் ஆசையாக வளர்த்து வந்த நாயையும் கொல்ல முடிவு செய்து விஷம் வைத்த உணவை கொடுத்தனர். அதனை சாப்பிட்ட நாய் சிறிது நேரத்தில் பரிதாபமாக உயிரிழந்தது. இன்று காலையில் வீட்டில் இருந்து யாருமே வெளியே வராததால் சந்தேகம் அடைந்த அக்கம் பக்கத்தினர், கதவைத் தட்டினர்.
ஆனால் யாரும் கதவைத் திறக்காததால் உடனடியாக போலீசாருக்கு தகவல் அளித்தனர். தகவலின்பேரில் சம்பவ இடத்திற்கு விரைந்த போலீசார், கதவை உடைத்து உள்ளே சென்று பார்த்தபோது மூன்றுபேரும் தூக்கில் பிணமாக தொங்கினார். அதன் பிறகு மூன்று பேரின் உடல்களையும் மீட்டு உடற்கூறு ஆய்வுக்காக அரசு மருத்துவமனைக்கு அனுப்பி வைத்தனர். இந்த சம்பவம் அப்பகுதியில் பெரும் அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது.