செல்போனில் சிக்னல் கிடைக்காத காரணத்தினால் 15 வயது சிறுவன் மரத்தின் மீது ஏறி முயன்ற போது மின்னல் தாக்கி உயிரிழந்த சம்பவம் பெரும் சோகத்தை ஏற்படுத்தியுள்ளது.
இந்தியா முழுவதும் கொரோனா தாக்கத்தின் காரணமாக மாணவர்கள் அனைவருக்கும் ஆன்லைன் மூலமாகவே வகுப்புகள் எடுக்கப்பட்டு வருகின்றது. இந்தியாவில் பல மாநிலங்களில் மலையடிவாரத்திலுள்ள கிராமத்தில் வசிக்கும் மாணவர்களுக்கு இன்டர்நெட் கிடைக்காத காரணத்தினால் மரத்தின் மீது ஏறி, மலைகளின் மீது ஏறி ஆன்லைன் பாடம் பயின்று வருகின்றனர். அதுமட்டுமில்லாமல் அது போன்ற கிராமங்களில் வசிப்பவர்களுக்கு சிக்னல் என்பது கிடைக்கவே செய்யாது. இதனால் மரம் மீதும், மலைகள் மீதும் ஏறும் பொழுது சில விபரீத சம்பவங்கள் நடைபெறுகின்றது. அது போன்று ஒரு சம்பவம் தான் தற்போது அரங்கேறியுள்ளது.
மகாராஷ்டிராவில், மலையடிவாரத்தில் உள்ள ஒரு கிராமத்தில் செல்போனில் நெட்வொர்க் கிடைக்காததால் மரத்தின் மீது ஏறி பேச முயன்ற 15 வயது சிறுவன் மின்னல் தாக்கி சம்பவ இடத்திலேயே பரிதாபமாக உயிரிழந்தார். பால்கர் என்ற மாவட்டத்தில் இடி மின்னலுடன் கனமழை பெய்து கொண்டிருந்த நேரத்தில் நான்கு சிறுவர்கள் நெட்வொர்க் வேண்டி மரத்தின்மேல் ஏறியுள்ளனர். இது திடீரென்று தாக்கிய மின்னல் காரணமாக ஒரு சிறுவன் மட்டும் சம்பவ இடத்திலேயே உயிரிழக்க, மற்ற சிறுவர்கள் காயங்களுடன் மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டுள்ளனர்.