பல்கலைக்கழக யுஜிசி நெட் தேர்வு முடிவுகள் இன்னும் சில நாட்களில் இணையதளம் வழியாக வெளியாகும் என பல்கலைக்கழக மானியக்குழு தெரிவித்துள்ளது.
உதவி பேராசிரியர் மற்றும் ஆராய்ச்சி படிப்புகளுக்கு மாணவர்கள் விண்ணப்பிக்க பல்கலைக்கழக மானியக்குழுவின் நெட் தகுதி தேர்வு நடத்தப்படுகிறது. இது தேசிய தேர்வு முகமையால் நடத்தப்படும் தகுதித் தேர்வு ஆகும். இதில் தேர்ச்சி பெற்றால் தான் தேசிய அளவிலான பல்கலைக்கழகங்களில் உதவி பேராசிரியர் மற்றும் ஆராய்ச்சி மாணவர் படிப்புகளுக்கு விண்ணப்பிக்க முடியும். மேலும் கொரோனா பரவல் காரணமாக கடந்த 2020-ஆம் ஆண்டு நடைபெற இருந்த யுஜிசி நெட் தேர்வு ஒத்திவைக்கப்பட்டது. இதனைத் தொடர்ந்து கடந்த 2021-ஆம் ஆண்டு ஜூன் மாதம் நடைபெற இருந்த தேர்வு ஒத்திவைக்கப்பட்டது.
மேலும் இந்த தேர்வை 2021-ஆம் ஆண்டு நவம்பர் 20-ஆம் தேதி முதல் 2022-ஆம் ஆண்டு ஜனவரி 5-ஆம் தேதி வரை பல்வேறு கட்டங்களாக நடத்தப்பட்டது. இந்நிலையில் இந்த யுஜிசி நெட் தேர்வு முடிவுகள் கடந்த ஜனவரி மாத இறுதியில் வெளியாகும் என எதிர்பார்க்கப்பட்டது. ஆனால் குறிப்பிட்ட தேதிகளில் தேர்வு முடிவுகள் வெளியிடாததால் இன்னும் சில நாட்களில் தேர்வு முடிவுகள் இணைய தளம் வழியாக வெளியாகும். மேலும் அதற்கான பணிகள் நடைபெற்று வருவதாக பல்கலைக்கழக மானியக்குழு தெரிவித்துள்ளது.