ஆழ்துளை கிணற்றில் விழுந்த 3 வயது குழந்தை 4 நாட்களுக்கு பிறகு சடலமாக மீட்கப்பட்ட சம்பவம் சோகத்தை ஏற்படுத்தியுள்ளது.
மத்யபிரதேசத்தில் நிவாரி மாவட்டதிலுள்ள சேதுபுரா கிராமத்தில், கடந்த 4ம் தேதியன்று வீட்டின் அருகில் விளையாடிக்கொண்டிருந்த 3 வயது சிறுவன் பிரகால்த் அங்கு திறந்த நிலையில் இருந்த ஆழ்துளை கிணற்றில் விழுந்துள்ளான். இந்நிலையில் ஆழ்துளை கிணற்றிலிருந்து அழுகுரல் கேட்டதால் அங்கு வந்து பார்த்த சிறுவனின் பெற்றோர்கள் அதிர்ச்சியடைந்து காவல்துறை மற்றும் தீயணைப்பு படையினருக்கு தகவல் கொடுத்துள்ளனர். இதையடுத்து அங்கு விரைந்து வந்த தேசிய பேரிடர் மீட்பு படையினர் சிறுவனை மீட்கும் முயற்சியில் ஈடுபட்டு வந்துள்ளனர்.
சிறுவன் 60 அடி ஆழத்தில் உள்ளான் என்று அறிந்த பிறகு ஆழ்துளை கிணற்றின் அருகில் ஒரு குழி தோண்டி சிறுவனை மீட்க முயற்சித்துள்ளனர். இதையடுத்து சிறுவனுக்கு தேவையான ஆக்சிஜன் வழங்கப்பட்டு வந்து கொண்டிருந்த நிலையில், 4ம் தேதி மாலையிலேயே சிறுவனின் உடலில் அசைவுகள் இல்லாததால் பெற்றோர்கள் கவலையில் கடவுளை வேண்டிக்கொண்டிருந்தனர். மேலும் இந்த ஆழ்துளை கிணற்றில் தண்ணீர் இருந்ததால் குழந்தையை மீட்கும் பணியில் சிரமம் ஏற்பட்டுள்ளது.
இருப்பினும் முயற்சியை கைவிடாமல் மீட்புப்பணிகள் 4 நாட்களாக தொடர்ந்த நிலையில், 5ம் நாள் சிறுவன் சடலமாக மீட்கப்பட்டுள்ளார். இதனால் அப்பகுதி மக்கள் மிகுந்த சோகத்தில் உள்ளனர். மேலும் குழந்தையை பார்த்த பெற்றோர்கள் கதறி அழுதது நெஞ்சை பதற வைப்பதாக இருந்துள்ளது. சுர்ஜித் போன்று, பிரகல்த் போன்று இன்னும் எத்தனை பிஞ்சுகளை மூடப்படாத ஆழ்துளை கிணறுகளுக்கு காவு கொடுப்பது…!! இந்த நிலைமை எப்போது மாறும்…!!