ஜெர்மன் மருத்துவமனைகளில் தீவிர சிகிச்சை பிரிவுகளில் இடம் இல்லை என மருத்துவர்கள் தெரிவித்துள்ளனர்.
கடந்த 2019 ஆம் ஆண்டு டிசம்பர் மாதம் சீனாவில் வுகான் நகரில் தோன்றிய கொரோனா வைரஸ் தொற்று உலக நாடு முழுவதிலும் பரவி ஏராளமான பாதிப்பை ஏற்படுத்தி வருகிறது. ஜெர்மனியிலும் தொடர்ந்து ஏராளமானோர் பாதிக்கப்பட்டுள்ள நிலையில் தற்போது தடுப்பூசி போடும் பணி மேற்கொள்ளப்பட்டுள்ளது. இந்நிலையில் ஜெர்மன் மருத்துவமனை தீவிர சிகிச்சை பிரிவுகளில் 10% படுக்கைகள் மட்டுமே காலியாக உள்ளது என்று தெரிவிக்கப்பட்டுள்ளது. இதுகுறித்து மருத்துவக்குழு தலைவர் GernotMarx தகவல் ஒன்றை
வெளியிட்டுள்ளார்.
அதில் கொரோனா தொற்றை கட்டுப்படுத்தவும் புதிய பாதிப்பு ஏற்படாமல் இருக்கவும் மூன்று வாரங்களுக்கு கடுமையான ஊரடங்கு அமல்படுத்த வேண்டும் என்று கூறியுள்ளார். ஜெர்மனியில் தற்போது 4500 பேர் தீவிர சிகிச்சை பிரிவில் சிகிச்சை பெற்று வருகின்றனர் என்றும் ஒரு மாதத்திற்கு முன்பு இந்த எண்ணிக்கை 3000 ஆக இருந்தது எனவும் கூறியுள்ளார். மேலும் தற்போது 24 ஆயிரம் படுக்கைகள் உள்ளன என்றும் ஒரு வாரத்திற்குள் 10,000 படுகைகளை தயார் செய்ய இயலும் எனவும் கூறியுள்ளார்.
மேலும் தீவிர சிகிச்சைப் பிரிவுகளில் கொரோனா நோயாளிகளை மட்டும் அனுமதிக்க முடியாது என்றும் மற்ற நோயாளிகளும் உள்ளார்கள் எனவும் கூறியுள்ளார். இந்நிலையில் மருத்துவமனைகள் கடந்த 2020 ஆம் ஆண்டு இருந்த நெருக்கடியான சூழ்நிலையை போலவே தற்போது இருப்பதாக மருத்துவர்கள் தெரிவிக்கிறார்கள்.