காஞ்சிபுரத்தில் ரூபாய் ஒரு லட்சம் மதிப்புள்ள 3 டன் அரிசியை பறக்கும் படையினர் பறிமுதல் செய்துள்ளார்கள்.
தமிழகத்தில் சட்டசபை தேர்தல் நெருங்கும் நிலையில் தேர்தல் விதி முறைகளும் நடத்தைகளும் அமலில் உள்ளது. மேலும் பணம் பட்டுவாடா போன்ற சட்டத்திற்கு புறம்பான செயல்கள் நடைபெறாமலிருக்க பறக்கும் படையினர் தீவிர வாகன சோதனையில் ஈடுபட்டு வருகின்றனர் . இந்நிலையில் காஞ்சிபுரம் தொகுதிக்கு உட்பட்ட கீழம்பி பகுதியில் பறக்கும் படையினர் வாகன சோதனை ஈடுபட்டுக் கொண்டிருந்தனர் . அப்போது அவ்வழியாக காஞ்சிபுரத்திலிருந்து ஆரணிக்கு செல்வதற்காக மினி லாரி ஒன்று வந்தது .
இதனை தொடர்ந்து பறக்கும் படையினர் லாரியை சோதனை செய்யும்போது அதில் மூட்டை மூட்டையாக அரிசி இருப்பது தெரிய வந்தது . இதற்கான உரிய ஆவணத்தை பறக்கும்படையினர் கேட்டதையடுத்து லாரி டிரைவரிடம் போதிய ஆவணங்கள் இல்லை . இதனால் பறக்கும் படையினர் சுமார் 150 மூட்டைகளில் இருந்த ஒரு லட்சம் மதிப்பிலான 3 டன் அரிசியை பறிமுதல் செய்து காஞ்சிபுரம் தாலுகா அலுவலகத்தில் ஒப்படைத்தனர். மேலும் இதற்கான உரிய ஆவணத்தை காண்பித்து அரிசி மூட்டையை பெற்றுக் கொள்ளுமாறு அதிகாரிகள் லாரி டிரைவரிடம் தெரிவித்துள்ளனர்.