கடந்த இரண்டு வருடங்களாக கொரோனா காரணமாக நடைபெறாமல் இருந்த பள்ளி மாணவர்களுக்கான பொதுத் தேர்வுகள் இந்த ஆண்டு பல்வேறு மாநிலங்களிலும் நடத்தப்பட்டு வருகிறது. பெரும்பாலும் நடப்பு கல்வி ஆண்டில் ஆன்லைன் வகுப்புகளே நடத்தப்பட்டது. இருப்பினும் திட்டமிட்டபடி இந்த ஆண்டு 10, 12ஆம் வகுப்பு மாணவர்களுக்கு பொதுத் தேர்வுகள் நடந்து வருகிறது. அந்த வகையில் இரண்டு வருடங்களுக்கு பிறகு ஆந்திர மாநிலத்தில் கடந்த மாதம் பத்தாம் வகுப்பு பொதுத்தேர்வுகள் தொடங்கி நடைபெற்று வருகிறது.
இந்த நிலையில் ஆந்திராவில் உள்ள கிருஷ்ணா மாவட்டத்தில் பொதுத்தேர்வு விடைத்தாள் தேர்வு மையத்திற்கு அனுப்பப்படுவதாகவும், தேர்வுகளில் முறைகேடு நடப்பதாகவும் பள்ளிக்கல்வித்துறை அதிகாரிகளுக்கு புகார் வந்துள்ளது. அதன்பேரில் தேர்வு மையங்களில் சோதனை நடத்தப்பட்டது. இதையடுத்து சம்பவ இடத்திற்கு விரைந்து சென்ற கல்வி மற்றும் காவல்துறை அதிகாரிகள் விசாரணையில், தேர்வுதாள்களுக்கான விடைகள் பல ஆசிரியர்களுடையே செல்போன்களில் இருந்ததை கண்டுபிடித்துள்ளனர்.
பின்னர் முறைகேட்டில் ஈடுபட்ட கனுமோலு ஜில்லா பரிஷத் உயர்நிலைப் பள்ளியை சேர்ந்த ஒரு ஆசிரியரும், பசுமரு ஜில்லா பரிஷத் பள்ளியை சேர்ந்த 6 ஆசிரியர்களும் பணியிடை நீக்கம் செய்யப்பட்டுள்ளனர். அதோடு மட்டுமில்லாமல் ஆந்திராவில் உள்ள பல்வேறு மாவட்டங்களிலும் பொதுத்தேர்வில் முறைகேடுகள் நடந்துள்ளது. இதுவரை கிட்டத்தட்ட 42 ஆசிரியர்கள் பணியிடை நீக்கம் செய்யப்பட்டுள்ளதாக அதிர்ச்சி தகவல் வெளியாகியுள்ளது.