பூச்சி தாக்குதலில் இருந்து நெற்பயிர்களை எப்படி பாதுகாப்பது என்பது குறித்து வேளாண் அதிகாரி விளக்கம் அளித்துள்ளார்.
காரைக்கால் மாவட்ட கூடுதல் வேளாண் இயக்குனர் செந்தில்குமார் வெளியிட்டுள்ள செய்தி குறிப்பில் கூறியதாவது: “கடந்த சில தினங்களாக பெய்த மழை காரணமாக வயலில் அதிகமாக தேங்கியுள்ள நீரை வடிகட்டி, தேவையான அளவுக்கு மட்டும் நீரை வைத்திருக்கவேண்டும். தற்போதைய சூழலில் பூச்சித் தாக்குதல் அதிகமாக இருக்கிறது. தங்களது நெற்பயிரை அடிக்கடி பார்வையிட்டு இத்தகைய தாக்குதல்களின் நிலவரத்தை அறிய வேண்டும்.
பயிருக்கு தேவைக்கு அதிகமான உரம் இடுவதை தவிர்க்க வேண்டும். காரைக்கால் மாவட்டத்தில் நெற்பயிரில் ஆங்காங்கே இலை சுருட்டு புழு, குருத்துப் பூச்சி, ஆனைக்கொம்பன் ஈ போன்ற பூச்சிகளின் தாக்குதல் தென்படுவதாக கூறப்படுகிறது. பூச்சி தாக்குதல் காரணமாக சேத நிலை காணப்பட்டால் குறிப்பிட்ட மருந்துகளை தெளிக்க வேண்டும். இதுகுறித்து விவசாயிகள் தங்கள் பயிர், உரம், பயிர் பாதுகாப்பு குறித்து அருகிலுள்ள உழவர் உதவியகங்களை அணுகி தேவையான ஆலோசனைகளை பெற வேண்டும்” என்று அவர் கூறியுள்ளார்.